×

தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க சிறப்பு குழுக்கள் கலெக்டரிடம் மதிமுக வலியுறுத்தல்

தூத்துக்குடி, அக். 24: தீபாவளி   பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை   தடுத்திட கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் என தூத்துக்குடி கலெக்டரிடம் மதிமுக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மதிமுக மீனவர் அணி   மாநில செயலாளர் நக்கீரன் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி,   மாநகர செயலாளர் முருகபூபதி,  இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன்,   சுந்தரராஜ், பொன்ராஜ் உள்ளிட்டோர் கலெக்டரிடம் மனு அளித்தனர். மனு விவரம்: தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சிரமமின்றி சொந்த   ஊர்களுக்கு திரும்பும் வகையில் சிறப்பு பஸ்களை இயக்க அரசுப்   போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் வணிகம், படிப்பு, பணி   மற்றும் தொழில் தொடர்பாக சென்னையில் வசித்து வரும் தென்மாவட்டங்களை  சார்ந்த  ஏராளமான பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு  திரும்பி  வருவதற்கு அரசு பஸ்களில் இடம் இல்லாததால் ஆம்னி  பஸ்களில்  முன்பதிவு செய்து வருகின்றனர்.
 இவ்வாறு முன்பதிவு செய்யும்  பயணிகளிடம்  கூடுதல் கட்டணமாக ரூ.1000ம் வரை வசூலிக்கப்படுவதாக தெரிகிறது.

 இவ்வாறு ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க   போக்குவரத்துத் துறை சார்பில் கண்காணிப்புக்கான சிறப்பு குழுக்கள் அமைத்து சோதனை   நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு   தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக   தெரியவில்லை. அதேபோன்று தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து   சென்னை திரும்பிட முன்பதிவு செய்திடும் பயணிகளிடமும் கூடுதல் கட்டணம்   ரூ.1000ம் வரை வசூலிக்கப்படுவதாக தெரிகிறது. எனவே, தீபாவளி   பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை   தடுத்திட போக்குவரத்துத்துறையில் அமைத்துள்ள அக்குழுக்களை தங்கள்   கண்காணிப்பில் வைத்து ஆம்னி பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களுக்கு   முன் பதிவு செய்திடும் இடங்களில் சோதனை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை   எடுத்து ஆம்னி பஸ்களில் நடைபெரும் கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : committees ,Collector ,Diwali ,Omni ,
× RELATED சென்னையில் மாற்றுத்திறனாளிகள்...