×

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தூத்துக்குடியில் அனைத்து ஏற்பாடும் தயார்

தூத்துக்குடி, அக். 24: தூத்துக்குடி   மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றும் வடகிழக்கு   பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர்   சந்தீப் நந்தூரி கூறினார். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர குறைதீர் நாள் கூட்டத்திற்கு தலைமை வகித்த கலெக்டர்   சந்தீப் நந்தூரி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, விரைவாக பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக   வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. எட்டயபுரத்தில் அதிகபட்ச  மழை   பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் மழை தொடங்குவற்கு   முன்பு தூர்வாரப்பட்டுள்ளதால் மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் குளங்களில் தேங்கியுள்ளது. குறிப்பாக 40 முதல் 50 சதவீத அளவுக்கு மழைநீர் மாவட்டத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது.   மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கிநிற்பதாக புகார்கள் வந்துள்ளன. தூத்துக்குடியில் தற்காலிக   பஸ்நிலையம், புதிய தாலுகா அலுவலகம், தபால் தந்தி காலனி, சத்யா நகர்,   டிஎம்பி காலனிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் பேசியுள்ளேன். இதையடுத்து தேங்கிநிற்கும் மழைநீர் மின்மோட்டார் கொண்டு உறிஞ்சி அகற்றப்படும். தூத்துக்குடியில்   அமைந்துள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்க   நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதங்கள் மழைக்காலமாக   இருப்பதால்  மழைநீர் தேங்கும் இடங்களில் அதனை அகற்றுவதற்கு தற்காலிகம்   மற்றும் நிரந்தர தீர்வு காண போதுமான நடவடிக்கைகளை எடுக்க   உத்தரவிடப்பட்டுள்ளது. தற்காலிக பஸ்நிலையத்தில் பேவர் பிளாக் அமைக்க   முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. குறிப்பாக தங்குமிடம், ரேஷன் பொருட்கள் இருப்பு வைத்தல், மேலும்   பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.  இம்மாவட்டத்தில் பெரிய   அளவில் டெங்கு பாதிப்பு இல்லை. இதுவரை 8 பேர் டெங்கு பாதிப்பால் அரசு   மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 7 பேர் சிகிச்சை முடிந்து   திரும்பிவிட்டனர். தற்போது காய்ச்சல் சீசன் ஆரம்பித்துள்ளதால் டெங்கு   ஒழிப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்’’  என்றார். அப்போது கூடுதல் கலெக்டர்  விஷ்ணு சந்திரன், சப்-கலெக்டர் சிம்ரன்   ஜித்சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Thoothukudi ,North East Monsoon ,
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!