×

இடம் தேர்வு செய்தும் தீயணைப்பு நிலையம் அமைக்காத அவலம்

செய்யூர், அக்.24: செய்யூர் பகுதியில் புதிய தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்து, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படாததால்  தீயணைப்பு நிலையம் வாடகை கட்டிடத்தில் இயங்குகிறது. இதனால், தீயணைப்பு வீரர்கள் அவதியடைந்து வருகின்றனர். மதுராந்தகம் தாலுகாவில் இருந்து செய்யூர் தொகுதி தனி தாலுகாவாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரிக்கப்பட்டது. இதையடுத்து, செய்யூர் தாலுகாவில் தனி நீதிமன்றம், அரசு கல்லூரிகள் மற்றும் அரசு துறை சார்ந்த கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும் என செய்யூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதில், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். செய்யூர் பகுதியில் உள்ள, வேளண் துறை விதை கிடங்கு சொந்தமான பழைய அரசு கட்டிடத்தில் தீயணைப்பு நிலையம் கடந்த 3 ஆண்டுகளாக இயங்குகிறது. இப்பகுதியில், கைவிடப்பட்ட வேளாண் துறை அரசு கட்டிடத்தை, மறு புனரமைப்பு செய்து அதில் தனி நீதிமன்றம் அமைப்பதற்கான பணிகள்  மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், தீயணைப்பு நிலையத்துக்கும் புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, செய்யூரில் இருந்து சித்தாமூர் செல்லும் வழியில்  அரசுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் புதிய தீயணைப்பு நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால், இடம் தேர்வு செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், புதிய கட்டிடம் கட்டுவதற்கான எந்த பணியும் மேற்கொள்ளவில்லை.
தற்போது உள்ள கட்டிடத்தில் போதுமான வசதிகள் இல்லாததால், தீயணைப்பு வீரர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் புதிய தீயணைப்பு நிலைய கட்டிடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

Tags : location ,fire station ,
× RELATED ரெடி என்றதும் கோல்ஃப் விளையாடலாம்!