×

தூத்துக்குடி பகுதியில் சாலையில் இடையூறாக திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்




புதுக்கோட்டை, அக். 24: தூத்துக்குடி பகுதியில் சாலையில் போக்குவரத்துக்கும், வாகனஓட்டிகளுக்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளால் விபத்து அபாயம் நிலவுகிறது. தூத்துக்குடி - நெல்லை  நெடுஞ்சாலையோரம் உள்ள ஊர்களில் கால்நடைகள் தனியாக கொட்டகை அமைத்து வளர்க்கப்பட்டு வருகின்றன. காலை வேளைகளில் மாடுகளில் பால் கறந்த பிறகு அவற்றை வெளியில் மேய்ச்சலுக்குவிடும் உரிமையாளர்கள் பின்னர் அதைபற்றி கண்டுகொள்வதே கிடையாது. இதேபோல் ஆடுகளை வளர்ப்போரும் வியாபாரிகள் வாங்குவதற்காக வரும் நேரங்களில் மட்டும் தங்களுடைய ஆடுகளை தேடிப்பிடித்து விற்பனை செய்கின்றனர். பகல் நேரங்களில் வெளியில் விடப்படும் இந்த கால்நடைகள் தூத்துக்குடி -நெல்லை சாலையில் போக்குவரத்தும், வாகனஓட்டிகளுக்கும் இடையூறாக சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் சாலைகளின் ஓரங்களிலேயே தங்கி விடுகின்றன. இதனால் சமீப காலமாக வாகனங்களில் செல்பவர்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.

 குறிப்பாக நான்கு சக்கர வாகனங்களின் ஓட்டுநர்கள் சாலையில் திரியும் கால்நடைகள் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக வாகனங்களை வளைத்து ஒடித்து செல்ல வேண்டியுள்ளது. இந்த சமயங்களில் எதிரே வரும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் பெரிய வாகனங்கள் எந்த வழியாக வளையும் என்று வழிதெரியாமல் பிரச்னையை சந்திக்கின்றனர். இதனால் வாகன விபத்து ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. சமீபத்தில் கால்நடையால் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.  எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை தடுத்துநிறுத்தவும், அவற்றின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையாகும்.

Tags : Livestock accident ,area ,Tuticorin ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...