×

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் அலட்சியமாக போடப்பட்டுள்ள தலவிருட்சமான மாமரம் பாகங்கள்

காஞ்சிபுரம், அக். 24: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் தலவிருட்சமான மாமரத்தின் பாகங்களை பராமரித்து பக்தர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலின் தலவிருட்சமாக மாமரம் உள்ளது. இந்த மாமரம் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த ஒற்றை மாமரம் 4 வேதங்களை அடிப்படையாக கொண்டு 4 கிளைகளில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என 4 சுவைகளில் கனிதரும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த மாமரம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பட்டுப்போனது. உடனடியாக வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகளுடன் இணைந்து மரத்தின் திசுக்கள் எடுக்கப்பட்டு, புதிய மரக்கன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், பழைய மரத்தின் பாகங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு அலட்சியமாக மூலையில் வைக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், வரலாற்று சிறப்புமிக்க 3500 ஆண்டு தொன்மையான ஏகாம்பரநாதர் கோயில் தலவிருட்சமான மாமரத்தின் பாகங்களை, நடராஜர் சன்னதியின் பின்பும் இடப்பக்கத்தில் உள்ள ஒரு சன்னதியில் அலட்சியமாக போட்டு வைத்துள்ளனர். அந்த இடத்துக்கு பக்தர்கள் யாரும் போக முடியாது. அப்பகுதியில் செடிகள், கொடிகள், மரம்  முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. வரலாற்றுப் பொக்கிஷமாகன  மாமரத்தின் பாகங்களை செல் பூச்சிகள் தின்று அழிக்கின்றன. இதனால்  இந்த பாகங்கள் அழிந்து வரும் நிலை உருவாகியுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில நாட்காளில் இத்திருகோயிலின்  வரலாற்று பொக்கிஷங்களான மாமரத்தின் பாகங்களை இழக்க நேரிடும். எனவே, வரலாற்று பொக்கிஷமான மாமரத்தின் பாகங்களை சுத்தம் செய்து, கோயிலுக்கு வரும் பக்தர்கள் வழிபாட்டுக்கும், பார்வைக்கு வைத்து வரலாற்று சிறப்புகளை விளக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Kanchipuram Eagambaranathar ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...