×

மதுராந்தகம் நகராட்சி காந்தி நகரில் பழுதடைந்த தனியார் கட்டிடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம்

மதுராந்தகம், அக்.24: மதுராந்தகம் நகராட்சி காந்தி நகரில், தனியார் கட்டிடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம் சுகாதார சீர்க்கேடுடன் காணப்படுவதால், வேறு இடத்தில் புதிய கட்டிடம் கட்டி, அங்கு செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். மதுராந்தகம் நகராட்சி 19வது வார்டு காந்தி நகரில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த 20 குழந்தைகள் படிக்கின்றனர். அரசுக்கு சொந்தமான கட்டிடம் அங்கு இல்லாததால், தனியாருக்கு சொந்தமான வீடு ஒன்றின் தாழ்வாரத்தில் இந்த மையம் செயல்படுகிறது. மிகவும் பழமையான இந்த வீடு, மழை காலங்களில் மழைநீர் உள்ளே புகுந்துவிடும் நிலையிலும், சுகாதார சீர்க்கேடுடனும் காணப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்தால், பழமையான, பாதிப்படைந்த இந்த கட்டிடத்தால், குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என குழந்தைகளின் பெற்றோர்களும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். எனவே, தமிழக அரசு உடனடியாக, தற்காலிக நடவடிக்கையாக வேறு நல்ல கட்டிடத்தில் அங்கன்வாடி மையத்தை மாற்றி செயல்பட வைக்க வேண்டும். அரசு சார்பில், அதே பகுதியில் ஓரிரு மாதங்களில் புதிய கட்டிடம் கட்டி, பாதுகாப்பான முறையில் குழந்தைகள் படிக்க ஆவண செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Anganwadi Center ,Madurai Municipal Gandhi City ,
× RELATED துறையூர் அருகே 6 ஆண்டுக்கு பின் மின் இணைப்பு தரப்பட்ட அங்கன்வாடி மையம்