×

வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரை சாலையில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்

கூடுவாஞ்சேரி, அக். 24: ஜிஎஸ்டி சாலையோரத்தில் குப்பைகளை அகற்றாததால் வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரை கலெக்டர் ஆய்வு செய்தார். கடந்த 2015 - 2016ம் ஆண்டு பெய்த கன மழையால், 15க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைந்தன. இதில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வண்டலூர், ஓட்டேரி, ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, வல்லாஞ்சேரி, தைலாவரம், காட்டாங்கொளத்தூர், சிங்கபெருமாள் கோயில், செங்கல்பட்டு வரை சென்டர் மீடியன்களை மழை வெள்ளம் அடித்து சென்றது.மேலும், சாலையின் இருபுறமும் குப்பை, கழிவுகள் ஆங்காங்கே தேங்கியது. இதுவரை இந்த சாலையோரத்தின் இருபுறமும் உள்ள குப்பை, கழிவுகள் சரிவர அகற்றாமல் துறை அதிகாரிகள் மெத்தனப்போக்கில் செயல்பட்டு வந்தனர். இதுதொடர்பாக, பொதுமக்கள் சார்பில், மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

இதைதொடர்ந்து, வடகிழக்கு பருவமழை வருவதை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் கால்வாய்களை தூர்வாரியும், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களையும் கலெக்டர் பொன்னையா அறிவுறுத்தினார். இந்நிலையில், கலெக்டர் பொன்னையா நேற்று காலை வண்டலூர் வந்தார். அப்போது, காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, துணை அலுவலர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய பொறியாளர் மாரிச்செல்வன் ஆகியோரை தொடர்பு கொண்டு அங்கு வரவழைத்தார். அதன்பேரில், அனைவரும் அங்கு வந்தனர். பின்னர் கலெக்டர், தனது காரை நிறுத்திவிட்டு வட்டார வளர்ச்சி அலுவலரின் காரில் ஏறி, வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரை ஜிஎஸ்டி சாலையின் இருபுறமும் குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் அனைவரும் அந்தந்த எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கொட்டப்பட்டுள்ள குப்பை, கழிவுகளை அகற்ற வேண்டும். கால்வாய்களில் உள்ள அடைப்புகளை தூர்வார ஓரிரு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததாக கூறப்படுகிறது.

Tags : removal ,road ,Chengalpattu ,Vandalur ,
× RELATED காஞ்சிபுரம் தொகுதியை பாமகவுக்கு...