×

திருப்போரூர் ஒன்றியத்தில் பேரிடர் மீட்புக்குழு அதிகாரி ஆய்வு

திருப்போரூர், அக்.24: திருப்போரூர் வட்டத்தில் உள்ள 50 கிராமங்களில் வடகிழக்கு பருவமழையின்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. திருப்போரூர் வட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.  பேரிடர் மீட்புக்குழு உறுப்பினரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை  இயக்குனருமான மதிவாணன் ஐஏஎஸ், இதில் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை  வழங்கினார். இதில் திருப்போரூர் ஒன்றிய ஆணையாளர்  பிரகாஷ் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராகவன், சுகாதாரத் துறை, ஊரக  வளர்ச்சி துறை உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

கடந்த  2015ம் ஆண்டு வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட கிராமங்கள், அதை தொடர்ந்து  எடுக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், புயல் பாதுகாப்பு மையங்கள், உணவு  கூடங்கள், பொது மக்களுக்கு தேவையான பொருட்கள், மீனவர்களுக்கான எச்சரிக்கை  ஆகிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து காயார் பெரிய  ஏரியை இந்த குழுவினர் பார்வையிட்டனர். ஏரியின் மதகை உடனடியாக  சீரமைக்கும்படியும், மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படியும்  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.பின்னர், கடந்த 2015ம் ஆண்டு தையூர்  ஏரியில் இருந்து வெள்ளநீர் வெளியேறியதால் மூழ்கிய ஓஎம்ஆர்  சாலை, வெள்ளநீர் வடிகால்வாய் ஆகியவற்றை பார்வையிட்டு, அங்கு  கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தமாக வைக்கும்படி  ஊரக  வளர்ச்சி மற்றும் பொதுப்பணி துறையினருக்கு உத்தரவிட்டார்.

இன்று திருப்போரூர் ஊராட்சி  ஒன்றியத்தில் 2வது நாளாக  ஆய்வு மேற்கொள்ளும் அவர் முட்டுக்காடு, கோவளம்  ஆகிய பகுதிகளையும், மீனவ  கிராமங்களை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள புயல்  பாதுகாப்பு மையங்களையும் ஆய்வு  செய்கிறார்.
இதைத்தொடர்ந்து, 2வது நாளாக நேற்று திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் பேரிடர் மீட்டுக்குழு உறுப்பினர் மதிவாணன் ஆய்வு மேற்கொண்டார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு, கோவளம், செம்மஞ்சேரி மீனவ கிராமங்களையும், அங்கு மீனவர்களுக்கும், பொது மக்களுக்கும் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மீனவ கிராமங்களை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களையும் ஆய்வு செய்தார்.

Tags : Inspection ,Disaster Rescue Team ,Tirupporeur Union ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...