×

தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தூத்துக்குடி மகிளா கோர்ட் தீர்ப்பு

தூத்துக்குடி, அக்.24:  காயல்பட்டினத்தை சேர்ந்தவர் முகம்மதுரபி. இவரது மகன் யூசுப் அலாவுதீன்(34). இவர் சென்னையில் உள்ள ஒரு ஜூவல்லரியில் வேலை செய்து வந்தார். இவருக்கும் உடன்குடியை சேர்ந்த நபோலா பெனாசிர் என்பவருக்கும் கடந்த 3.8.2014ல் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது பெண் வீட்டார் 15 பவுன் நகைகளை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் நபோலா பெனாசிரிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு யூசுப் அலாவுதீனின் தாய் ரபிவுல் தரப்ஜா(59) மற்றும் சகோதரி பாத்திமா முஜமீலா(34) ஆகியோர் துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும் குழந்தை இல்லை என்றும் திட்டி வந்துள்ளனர். இதனை யூசுப் அலாவுதீன் தட்டிக்கேட்காமல் இருந்ததுடன், அவர்களுக்கு ஆதரவாகவே பேசி வந்துள்ளார்.  இதனால் மனமுடைந்த நபோலா கடந்த 17.6.2015ல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமான ஒன்றரை ஆண்டுகளுக்குள் இந்த சம்பவம் நடந்ததால் இதுகுறித்து அப்போதைய திருச்செந்தூர் ஆர்டிஓ தியாகராஜன் விசாரித்தார்.

 இந்த வழக்கு தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கினை நீதிபதி குமார் சரவணன் விசாரித்து நபோலா பெனாசீரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் யூசுப் அலாவுதீன், மாமியார் ரபிவுல்தரப்ஜா, மைத்துனி பாத்திமா முஜமீலா ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் அதனை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பு வக்கீல் சுபாஷினி ஆஜரானார்.

Tags : Tuticorin Mahila Court ,
× RELATED தேரியூர் கோயிலில் பூக்குழி திருவிழா