×

நாயக்கன்பேட்டை, ஏகனாம்பேட்டை பகுதிகளில் சாலையை கடக்க முடியாமல் மாணவர்கள் கடும் சிரமம்

வாலாஜாபாத், அக்.24: வாலாஜாபாத் அருகே நாயக்கன்பேட்டை, ஏகனாம்பேட்டை ஆகிய பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள், வாகனங்களின் நெரிசலால், சாலையை கடக்க முடியாமல் கடும் சிரமம் அடைகின்றனர். அந்த பகுதியில் போலீசாரை நியமித்து, போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் வரை செல்லும் சாலையை ஒட்டி, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், நாயக்கன்பேட்டை, ஏகனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் 2 மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. பள்ளிகளில், 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளிகளுக்கு பெரும்பாலான மாணவ, மாணவிகள் சைக்கிளிலும், நடந்தும் செல்கின்றனர். வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் பிரதான சாலை என்பதால், சாலையை கடக்க மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதுபோல் சாலையை கடக்கும்போது, வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக செல்வதால் மாணவர்கள் மீது வாகனங்கள் மோதி விடுமே என்ற அச்சமடைகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நாயக்கன்பேட்டை, ஏகனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் பள்ளி செல்லும் நேரங்களிலும், பள்ளி விடும் நேரங்களிலும் பிரதான சாலையை கடக்க கடும் சிரமப்படுகின்றனர். ஒரு சில நேரங்களில் அதிவேகமாக செல்லும் லாரிகள், கார்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருதி வாலாஜாபாத் போலீசார், பள்ளிகள் ஆரம்பிக்கும் நேரம் மற்றும் பள்ளி விடும் நேரத்தில், போக்குவரத்தை சீரமைக்க போலீசாரை நியமித்து மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக சாலையை கடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : road ,
× RELATED சீத்தஞ்சேரி கூட்டுச் சாலையில்...