×

தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம் பக்தர்கள் திரளாக பங்கேற்பு

தூத்துக்குடி, அக். 24: தூத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது. இதில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ மற்றும் பக்தர்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றனர். தூத்துக்குடி சிவன் கோயில் என பக்தர்களால் அழைக்கப்படும் பாகம்பிரியாள் சமேத சங்கரராமேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 15ம் தேதியன்று  கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலா நடந்துவந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட வைபவம் விமரிசையாக நேற்று நடந்தது.

 இதையொட்டி காலை 6 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தைத் தொடர்ந்து 8.45 மணிக்கு அம்பாள்  திருத்தேரில் எழுந்தருளினார். இதையொட்டி சிறப்பு பூஜைகளை  தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், சண்முகம் பட்டர், சுப்பிரமணியன் பட்டர் முன்னின்று நடத்தினர். காலை 9.50 மணிக்கு சிவத் தொண்டர்களின் தேவார இன்னிசையுடன் தேரோட்டம் துவங்கியது.  இதில் பெருந்திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து நிலையத்தில் சேர்த்தனர். தேரின் முன்பாக  கண்கவர் சிலம்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தேரோட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., கோயில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பெண்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மத்திய பாகம் போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Tags : Therottam ,Thoothukudi Shiva Temple ,
× RELATED திருவண்ணாமலையில் தீபத்திருவிழா...