×

மணமை அரசு பள்ளி வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து கடும் துர்நாற்றம்

திருக்கழுக்குன்றம், அக். 24: திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மணமை கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் பள்ளி வளாகத்தை சூழ்ந்த மழைநீருடன், கழிவுநீர் கலந்து கடும் தூர்நாற்றம் வீசுகிறது. இதனால், பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி அப்பகுதி மக்களுக்கும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மணமை கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு மணமை, கடும்பாடி, குன்னத்தூர் உள்பட பல கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழைபெய்து வருகிறது. இதையாட்டி, மணமை கிராமத்தில் உள்ள பல்வேறு சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. மேலும், அப்பகுதியில் முறையான கால்வாய் வசதி இல்லாததால், மழைநீர் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியின் வளாகத்தில் சூழ்ந்துள்ளது.

பல நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீருடன், கழிவுநீர் கலந்து அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதில், கொசுக்கள் உற்பத்தியாகி, சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பள்ளியின் சமையல் அறை அருகில், இந்த மழைநீர் சூழ்ந்துள்ளதால் சமையல் செய்ய முடியாமல் சமையலர்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை பள்ளி வளாகத்தில் சூழ்ந்துள்ள, மழைநீரை அப்புறப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள் மட்டும் இன்றி, அப்பகுதி மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, உடனடியாக அரசு பள்ளி வளாகத்தில் சூழ்ந்துள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும். மேற்கண்ட பகுதியில் முறையாக கால்வாய் அமைத்து அதன் மூலம் மழைநீர் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Tags : bride ,
× RELATED மணப்பெண் மாயம்