×

ஆவடியில் கொசு உற்பத்திக்கு வழிவகுத்த ஓட்டல், தியேட்டருக்கு ₹7.65 லட்சம் அபராதம்

ஆவடி, அக். 24: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருந்த குடோன், ஓட்டல், தியேட்டர், பள்ளி உள்ளிட்டவைகளுக்கு ₹7.65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.  அதேபோன்று  திருவள்ளூர், பள்ளிப்பட்டு பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி அபராதம் விதித்தனர்.  ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல், கோயில்பதாகை, அண்ணனூர், மிட்டனமல்லி, முத்தபுதுபேட்டை ஆகிய பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.  திருமுல்லைவாயல், நேதாஜி நகரை சேர்ந்த பள்ளி மாணவி புவனேஸ்வரி (10) என்பவர் மர்ம காய்ச்சலுக்கு பலியானார். இந்நிலையில் நேற்று மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் வைத்தியலிங்கம், சுகாதார அதிகாரி மோகன், சுகாதார ஆய்வாளர்கள் ஜாபர், ஜி.பிரகாஷ், ரவிச்சந்திரன், நாகராஜ், பிரகாஷ் ஆகியோர் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி ஆகியிருந்த திருமுல்லைவாயல், சிடிஎச் சாலையிலுள்ள இரும்பு குடோனுக்கு ₹2 லட்சம், ஆவடி சாலையில் உள்ள பிளாஸ்டிக் குடோனுக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்தனர்.
மேலும்,  ஆவடி, புதிய ராணுவ சாலையில் உள்ள திருமண மண்டபத்திற்கு ₹1.5 லட்சம், அதே பகுதியில் உள்ள பிரபல ஓட்டலுக்கு ₹25 ஆயிரம், ஆவடி- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் 3 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ₹20 ஆயிரம், காமராஜர் நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு ₹20 ஆயிரம், அதே பகுதியில் உள்ள தியேட்டருக்கு ₹50 ஆயிரம், பட்டாபிராம், தண்டுரையில் உள்ள 4 குடியிருப்புகளுக்கு ₹20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு, டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருந்த இடங்களில் ₹7.65 லட்சம்  அபராதம் விதிக்கப்பட்டது. திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள தனியார் நிறுவனம் மற்றும் உளுந்தை ஊராட்சியில் உள்ள எண்ணெய் நிறுவனம் ஆகியவைகளில் நேற்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, இரு நிறுவனங்களிலும் பழைய டயர்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், கண்ணாடி பாட்டில்கள், எண்ணெய் பேரல்கள் உள்ளிட்ட பொருட்களில் மழைநீர் தேங்கி, ஏடிஎஸ் கொசு புழுக்கள் அதிக அளவில் உற்பத்தியானது தெரிந்தது.
இதையடுத்து, இரு நிறுவனங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின்போது, வட்டாட்சியர் பாண்டியராஜன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். பள்ளிப்பட்டு:  ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள தனியார் தொழிற்சாலையில் கால்நடை உதவி இயக்குநர் தாமோதரன் தலைமையில் ஆர்.கே.பேட்டை தாசில்தார் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், வட்டார மருத்துவ அலுவலர் சந்தியா, சுகாதார ஆய்வாளர்கள் பாலன், சலீம், உதயசூரியன் ஆகியோர் கொண்ட குழு, டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி ஆகியிருக்கிறதா என நேற்று ஆய்வு செய்தனர். அப்போது டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாவது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து, டெங்கு கொசு ஒழிப்பு குழுவினர், அந்த தனியார் நிறுவனத்துக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்தனர்.

மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி
செங்குன்றம் அடுத்த கிராண்ட்லைன் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் இளவரசு. செங்குன்றத்தில் உள்ள தனியார் மால் ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் கவிதா (21). பட்டதாரி. இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் வந்து சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த வாரம் வீடு திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டு செங்குன்றத்தை அடுத்த எம்ஏ நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடந்த வெள்ளி அன்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். மர்ம காய்ச்சலால் பட்டதாரி இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : hotel ,mosquitoes ,Avadi ,
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்...