×

சேலை ஊராட்சியில் புதர்மண்டிய அங்கன்வாடி மையம்

திருவள்ளூர், அக். 24: திருவள்ளூர் அடுத்த சேலை ஊராட்சியில், அங்கன்வாடி மையம் அருகே புதர்மண்டி கிடக்கும் முட்செடிகளையும், கழிவுகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது சேலை ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஒன்றிய சாலையோரம் 2014-15ம் ஆண்டு ரூ.6.50 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டி திறக்கப்பட்டது. தற்போது 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் திறக்கப்பட்ட பிறகு இதுவரை எந்த பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் மையத்தை சுற்றி முட்புதர்கள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பவே பெற்றோர் அச்சம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அங்கன்வாடி மையத்தை சுற்றி சாக்கடை கழிவுநீர் தேங்கி கொசுக்களின் உற்பத்தி கேந்திரமாக காட்சியளிக்கிறது. கடும் துர்நாற்றமும் வீசுகிறது. சாக்கடை நீர் தேக்கத்தால் குழந்தைகளுக்கு பல்வேறு நோய் தொற்றுகளும் ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சேலை ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தை சுற்றி வளர்ந்துள்ள முட்செடிகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Pudurmantiya Anganwadi Center ,Salem Panchayat ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே டயர்...