×

உப்பனாறு கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்

புதுச்சேரி, அக். 24: புதுச்சேரி நகரின் மையப் பகுதி வழியாக சென்று கடலில் கலக்கிறது உப்பனாறு. அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக காமராஜர் சாலை மற்றும் மறைமலையடிகள் சாலையை இணைக்கும் வகையில் ரூ.44 கோடி செலவில் உப்பனாறு கழிவுநீர் வாய்க்கால் மீது போக்குவரத்து மேம்பாலம் கட்டும் பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், காமராஜர் சாலை மற்றும் மறைமலையடிகள் சாலையை இணைக்கும் வேலை மட்டுமே எஞ்சியுள்ளது. பல ஆண்டுகளாக நடந்து வரும் இப்பணியால் உப்பனாறு ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதி மக்கள் மழைக்காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கட்டுமான பணிக்காக கொட்டி வைக்கப்பட்டுள்ள மணல் மற்றும் பொருட்களால் வாய்க்காலில் கழிவுநீர் வழிந்தோடு செல்வது தடைபட்டு ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதனால் ஆண்டுதோறும் மழைக்காலத்திற்கு முன்பாக பாலம் கட்டுமான பணியை தற்காலிகமாக நிறுத்தி விட்டு, வாய்க்காலில் தூர்வாரப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே அக்டோபர் முதல் வாரத்தில் தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறையினர் தொடங்கினர். உப்பனாறு வாய்க்காலில் தூர்வாருவதற்கான செலவை சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனம் ஒன்று ஏற்றுள்ளது. அந்த திட்டத்தின்படி, உப்பனாறு கழிவுநீர் வாய்க்காலில் பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியை பொதுப்பணித்துறை செயலர் சுர்பிர் சிங் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தலைமை பொறியாளர் மகாலிங்கம், கண்காணிப்பு பொறியாளர் பெட்ரோகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். பருவமழை தொடங்கி விட்டதால் பணியை விரைவுப்படுத்த அதிகாரிகளுக்கு செயலர் உத்தரவிட்டார். இதேபோல், நகரப் பகுதியில் உள்ள பள்ள வாய்க்கால், மேட்டு வாய்க்கால் உள்ளிட்ட பிரதான வாய்க்கால்களிலும் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...