×

தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் புதுச்சேரி காவல்துறை தீவிரம்

புதுச்சேரி, அக். 24: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டதால் கடைவீதிகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. நேருவீதி, காந்தி வீதி, அண்ணா சாலை, பாரதி வீதி, சின்னசுப்புராய பிள்ளை வீதி, கொசக்கடை, புஸ்சி வீதி, கடலூர் சாலை உள்ளிட்ட கடை வீதிகளில் கூட்டம் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதையொட்டி அப்பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பார்க்கிங் திட்டத்தை முறைப்படுத்தவும் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சிசிடிவி கேமிராக்கள் கண்காணிப்பு மட்டுமின்றி ஒலிபெருக்கி வாயிலாகவும் திருடர்கள், பயணிகள் உடமைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

 இதனை சீனியர் எஸ்பி ராகுல் அல்வால், கிழக்கு எஸ்பி மாறன், டிராபிக் எஸ்பி முருகவேல் ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் நேரு வீதியில் மாலையில் கூட்ட நெரிசல் அதிகமாகும் என்பதால் வாகன போக்குவரத்தை தடை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தீபாவளியையொட்டி கூடுதல் பணிக்காக கிழக்கு சரக காவல் நிலையங்களுக்கு ஐஆர்பிஎன், பயிற்சி காவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், குற்ற சம்பவங்களை தடுத்தல் உள்ளிட்ட பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் வடக்கு, மேற்கு காவல் சரகங்களிலும் கடை வீதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. தீபாவளி பொருட்களை வாங்க பணத்தை எடுத்துச் செல்பவர்கள் கவனமாக இருக்கவும், தங்களது உடமைகளையும், குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்ளவும் காவல்துறை அறிவுறுத்தி வருகிறது.


Tags : Puducherry Police ,Diwali ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...