×

தரமில்லாத தீபாவளி பலகாரம் விற்பனை

கள்ளக்குறிச்சி, அக். 24: கள்ளக்குறிச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரமில்லாத பலகார பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில்  சுமார் 50க்கும் மேற்பட்ட சுவீட் ஸ்டால் கடைகள் உள்ளது. இதுமட்டுமில்லாமல் சிலர் தீபாவளி பண்டிகை கால பலகார சீட்டு மாதந்தோறும் சந்தா பணம் வசூல் செய்கின்றனர்.  பின்னர் தீபாவளியையொட்டி மொத்தமாக ஒரு ஆண்டு பணத்துடன் இலவசமாக பலகாரம் அதாவது ஒரு கிலோ  இனிப்பு, ஒரு கிலோ கார வகைகள் ஆகியவற்றை பலகார சீட்டு கட்டிய  பொதுமக்களுக்கு வழங்கும் விதமாக இனிப்பு, காரம் தயாரித்து விற்பனை செய்யும்  பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில வியாபாரிகள், மக்களை கவருவதற்காக   இனிப்புகளில் கலர் சாயம் கெமிக்கல் கலப்படம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

மேலும்  இனிப்புகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க ரசாயனம் (கெமிக்கல்)  கலக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சில பெரு வியாபாரிகள் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை சில சிறு வியாபாரிகள்  குறைந்த விலைக்கு  வாங்கி சென்று தரம் இல்லாமல் இனிப்பு, காரம் தயாரித்து விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம்  சாட்டுகின்றனர். தமிழக அரசு தடை செய்த அஜினமோட்டோவை இனிப்புகளில்  கலப்படம் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.  இதனை வாங்கி சாப்பிடும் பொதுமக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கள்ளக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பலகார கடைகளில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தவறு செய்யும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.


Tags : board sale ,Diwali ,
× RELATED ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது