×

போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்,  அக். 24:  தீபாவளி போனஸ் வழங்கக்கோரி விழுப்புரம் மாவட்டத்தில் பணிமனைகள்  முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டன. போக்குவரத்து  தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் உடனே வழங்கிட வேண்டும். பண்டிகைக்கால  முன்பணம் வழங்கிட வேண்டும். உயர்த்தப்பட்ட அரியர் தொகையை வழங்க வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும்  போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அதன்படி விழுப்புரம் பணிமனை 1, 2, 3 ஆகிய இடங்களில் தொமுச, சிஐடியு,  ஏஐடியுசி, ஐஎன்டியுசி, மதிமுக உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில்  அதிகாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொமுச பொதுச்செயலாளர் பிரபாதண்டபாணி தலைமை  தாங்கினார். சிஐடியு மண்டலத்தலைவர் மூர்த்தி, மதிமுக பொதுச்செயலாளர்  மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொமுச அமைப்பு செயலாளர் வேலு,  பிரசார செயலாளர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் பெருமாள், தொமுச முன்னாள்  தலைவர் செல்வராஜ், பணிமனை நிர்வாகிகள் பாலாஜி, ராமலிங்கம், வெங்கடேசன்,  சுப்பிரமணியன், சரவணன், சேகர், ரவி, திரிசங்கு, பாரதி உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர். அதிகாலையிலேயே பேருந்துகளை மறித்து தொழிலாளர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால். கிராமங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள்,  வெளியூர்செல்லும் பேருந்துகள் ஒரு மணிநேரமாக அங்கேயே நிறுத்தப்பட்டு  காலதாமதமாக சென்றன. பேருந்துகள் சேவை பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்பவர்கள்,  பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.


Tags : Transport workers ,workshop ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்