×

விருத்தாசலத்தில் ரயில்வே கடித நகலை எரித்து மஸ்தூர் யூனியன் போராட்டம்

விருத்தாசலம், அக். 24: விருத்தாசலம் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. விருத்தாசலம் கிளை செயலாளர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார். கிளைத்தலைவர் செல்வம், பொருளாளர் வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் 50 ரயில் நிலையங்களையும், லாபத்தில் இயங்கும் 150 விரைவு ரயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்க ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட பாதகமான கமிட்டி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 50 வயது மற்றும் 30 வருட சர்வீஸ் முடித்தவர்கள் திறமையற்றவர்கள் என பழி சுமத்தி வீட்டிற்கு அனுப்பும் முயற்சியை கைவிட வேண்டும்.

இடமாற்றத்திற்கு காத்திருக்கும் பிறமாநில தொழிலாளர்களை அவர்களுக்கு வேண்டிய இடங்களில் பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தர ரயில்வே தொழிலாளர் வேலையை பறித்து ஒப்பந்த ஊழியர்களாக்கும் சதித்திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அந்த உத்தரவு கடித நகலை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று முழுவதும் விருத்தாசலம் ரயில் நிலைய ரயில்வே தொழிலாளர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். இதில் தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் இளைஞரணி, மகளிரணி, ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள், கவுன்சில் உறுப்பினர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED `முதியோர் பென்சன் ₹8 ஆயிரம்...