கொலை செய்ய திட்டம் தீட்டிய ரவுடி உட்பட 4 பேர் கைது

புழல்: செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஆட்டந்தாங்கலை சேர்ந்தவர் சேது (26). பிரபல ரவுடி. இவர் மீது சோழவரம், செங்குன்றம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோலையம்மன் நகரை சேர்ந்தவர் முத்துசரவணன் (26). பிரபல ரவுடி. இவர் மீது அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோட்டைச்சாமி கொலை வழக்கு கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் செங்குன்றம், சோழவரம் ஆகிய காவல் நிலையங்களில் உள்ளன. சேதுவும், முத்துசரவணனும் எதிர் எதிர் கோஷ்டியை சேர்ந்த ரவுடிகள்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முத்துசரவணன் கோஷ்டியை சேர்ந்த கார்த்திக் (22) என்பவரை சேது கோஷ்டியினர் வெட்டிக்கொலை செய்தனர். அதே மாதத்தில் முத்து சரவணன், சேதுவின் மைத்துனர் பிரசாந்த் என்பவரை கொலை செய்தார். இந்த நிலையில் சேது தனது மைத்துனர் கொலைக்கு பழிவாங்க முத்து சரவணன் கோஷ்டியை சேர்ந்த ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி வருவதாக செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து செங்குன்றம் போலீசார் நேற்று பிரபல ரவுடி சேது அவரது கூட்டாளிகள் திருநெல்வேலி மாவட்டம் கானகத்து கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (எ) குட்டகார்த்திக் (23), சென்றம்பாக்கத்தை சேர்ந்த கௌதம் (25), செங்குன்றம் அடுத்த எம்ஏ நகரை சேர்ந்த தேவராஜ் (25) ஆகிய 4 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>