×

ரயில்வே ஸ்டேஷன்களில் சீசன் திருடர்களை பிடிக்க தனிப்படை

சேலம், அக். 24: சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் சீசன் திருடர்களை பிடிக்க தனிப்படை  அமைக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நகர பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இதற்காக ரயில்களில்  ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இது போக, கடைசி நேர பயணத்திற்காக அதிகப்படியானோர், ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவார்கள். இதன் காரணமாக, ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகம் காணப்படும்.
இக்கூட்ட நெரிசலை பயன்படுத்தி , நகைப்பறிப்பு, உடமைகள் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்காமல் தடுக்க ரயில்வே போலீசார், தனிப்படை அமைக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே, தமிழ்நாடு அதிரடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில், அந்தந்த பகுதி உள்ளூர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

சேலம் ரயில்வே ஸ்டேஷனில் தற்போது, சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம் மற்றும் வட மாநிலத்திற்கு செல்லும் ரயில்களிலும், பிளாட்பாரம் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். இத்துடன், ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பட்டாசு பார்சல்களை ரயில்களில் பயணிகள் கொண்டு செல்கிறார்களா? எனவும் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், ரயில்வே பாதுகாப்பு படையினரும் தீவிரப்படுத்தியுள்ளனர். இவர்கள், ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகளை கண்காணிக்கின்றனர். சந்தேகப்படும்படி வரும் நபர்களிடம் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags : season thieves ,railway stations ,
× RELATED ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ. 200 அபராதம்.: தெற்கு ரயில்வே