
கிருஷ்ணகிரி, அக்.24: கிருஷ்ணகிரியில் தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு தயாரிக்கும் இடங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ளவர்கள், சுகாதாரமான முறையிலும், ரசாயன பொருட்கள் கலக்காமல் தயாரிக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், நேற்று கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீபாவளி இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் இடங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் வெங்கடேசன் தலைமையில் ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன், சிவமணி, குமணன் உள்ளிட்ட அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் உள்ள இனிப்பு தயாரிக்கும் கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அனைத்து பண்டகளையும் சுகாதாரதமான முறையில் தயாரித்து விற்பனை செய்யவும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய கலரிங், சாக்ரின் பொருட்களை சேர்க்க கூடாது. உணவு தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் கண்டிப்பாக கையுறை அணிய வேண்டும். அஜினோமோட்டா என்ற சுவையூட்டும் உப்புகளை பயன்படுத்தக்கூடாது. பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். மேலும், பொதுமக்கள் பண்டிகை காலங்களில் இனிப்பு, காரங்களை பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும் என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.