×

தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்தில் 126 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

தர்மபுரி, அக்.24: தர்மபுரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, 126 பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை வரும் 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில் பட்டாசு வகைகளை வாங்கி வெடிக்க சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் தயாராகி வருகின்றனர். இவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, பட்டாசு விற்பனையாளர்கள் தயாராகி வருகின்றனர். நடப்பாண்டு சந்தையில் தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ள, புதிய ரக பட்டாசுகளுடன், தர்மபுரி நகரம் மற்றும் பென்னாகரம், பாலக்கோடு, அரூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய அனைத்து வட்டங்களிலும் மொத்தம் 134 கடைகள் அமைக்க விற்பனையாளர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பித்திருந்தனர்.

இந்த விண்ணப்பத்தில், தீ அணைப்பு மற்றும் மீட்புத் துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகள் பரிசீலித்து விதிகளுக்கு உட்பட்டு கடைகள் அமைக்க 126 பேருக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்கடைகள் வருவாய்த்துறை அனுமதித்த நாட்களில் திறந்து, விற்பனை செய்ய அதன் உரிமையாளர்கள் ஆயத்தமாகியுள்ளனர். இதேபோல, சிவகாசியிலிருந்த பட்டாசு தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் பெரிய நிறுவனங்களும் நேரடியாக விற்பனை நிலையங்களைத் திறந்து, பட்டாசுகள் விற்பனை செய்யவும் தயாராகி வருகின்றன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நடப்பாண்டு சந்தைக்கு பசுமைப் பட்டாசுகளும், குழந்தைகளைக் கவரும் புதிய பெயரில், வித, விதமான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. நமக்கு பிடித்த பட்டாசுகளை வாங்கி, உரிய வழிமுறைகளைப் பின்பற்றி பட்டாசுகளை பாதுகாப்பாக வெடித்து, விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாட ேவண்டும் என்றனர்.

Tags : fireworks shops ,Diwali ,
× RELATED ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது