×

வேலூர் மாநகராட்சியில் அதிகாரிகள் அதிரடி டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்ட வீடு, நிறுவனங்களுக்கு 2.90 லட்சம் அபராதம்

வேலூர், அக்.24: வேலூர் மாநகராட்சியில் டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்ட வீடு, நிறுவனங்களுக்கு ₹2.90 லட்சம் அபராதமும், 700 பேருக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் வரை வேலூர் மாவட்டத்தில் டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காய்ச்சலுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதோடு, காய்ச்சலுக்காக வருபவர்களின் விவரங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ய கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தலைமையில் மாநகராட்சி முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் நேற்று காலை 1வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் 12வது வார்டுக்கு உட்பட்ட சில்க்மில் பஸ் நிறுத்தம், அரசு கல்வியியல் கல்லூரி மற்றும் அதைச்சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாநகராட்சியில் மட்டுமே டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வீடு, வணிக நிறுவனங்கள் உட்பட 700 பேருக்கு நோட்டீஸ் வழங்கி, 2.90 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏறப்படுத்தும் வகையில், காலை இறைவணக்கம் பாடும் நேரத்தில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தூய்மை தூதுவராக பள்ளி மாணவர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு ஐடி கார்டு வழங்கி வீடு, பள்ளி சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தும் பணி வழங்கப்படுகிறது. மேலும் மாநகராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான அளவு நிலவேம்பு குடிநீர், மருந்துகள் இருப்பில் உள்ளது’ என்றனர்.

Tags : houses ,Vellore ,corporation ,establishments ,dengue mosquitoes ,
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...