×

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் சுகாதார ஆய்வாளரை தாக்கி கொலை மிரட்டல் ஆரணியில் பரபரப்பு

ஆரணி, அக்.24: ஆரணியில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த சுகாதார ஆய்வாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் உள்ள ஸ்வீட் கடை, மளிகை கடை, ஓட்டல், பழக்கடை, பூக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்துவதாக நகராட்சி ஆணையாளருக்கு புகார் வந்தது. அதன்பேரில், சுகாதார ஆய்வாளர் குமரவேல் தலைமையில் துப்புரவு மேற்பார்வையாளர் ஜெயக்குமார் ஆகியோர் ஆரணியில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களை நேற்று பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, காந்தி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், அங்கு பிளாஸ்டிக் கவர்களில் வைத்திருந்த உணவு பொருட்களை அழித்தனர். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு நகராட்சி அலுவலகத்திற்கு நடந்து சென்றனர்.

அப்போது, அங்கு வந்த ஓட்டல் உரிமையாளர் அன்சர்பாஷா மற்றும் அவரது மகன் அப்சல் ஆகியோர் சுகாதார ஆய்வாளர் குமரவேலை மடக்கி அவர் சட்டையை பிடித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சுகாதார ஆய்வாளர் குமரவேல் மற்றும் அதிகாரிகள் இதுகுறித்து ஆணையாளரிடம் தெரிவிக்க அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு வந்த அன்சர்பாஷா, அப்சல் ஆகியோர் ஆணையாளரிடம், குமரவேல் மற்றும் அதிகாரிகள் என்மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக என்னுடைய ஓட்டலில் அடிக்கடி வந்து ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை அழிக்கின்றனர். மேலும், தற்போது நடந்த தவறுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். இனி என்னுடைய ஓட்டலில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்கிறேன் என்று கூறி சுகாதார ஆய்வாளர் குமரவேலிடம் மன்னிப்பு கேட்டு சென்றனர்.

Tags : health inspector ,
× RELATED தெங்கம்புதூரில் ₹28 லட்சத்தில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மையம்