×

அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவையொட்டி சுவாமி வீதியுலா வாகனங்கள் சீரமைப்பு பணி தீவிரம்

திருவண்ணாமலை, அக்.24: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, டிசம்பர் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக 10ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றப்படும்.
தீபத்திருவிழாவை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் அதற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. திருக்கோயில் பராமரிப்பு, கோபுரங்கள் சீரமைப்பு, பஞ்ச ரதங்கள் சீரமைப்பு பணி செய்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது.

அதன்படி, தீபத்திருவிழா உற்வசம் நடைபெறும் நாட்களில், சுவாமி புறப்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் மர வாகனங்கள் அனைத்தையும் பழுதுபார்த்து, வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. மேலும், சுவாமி வீதியுலா செல்லும் சகடைகள் பழுதுபார்த்தல், அவற்றின் சக்கரங்களை பராமரித்தல் போன்ற பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் அண்ணாமலையார் பவனி வரும் மகா ரதம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன் ஹைட்ராலிக் பிரேக் மற்றும் தேர் அச்சுகளில் பழுதுகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனவே, திருச்சி பெல் நிறுவன பொறியாளர்கள் குழு விரைவில் ஆய்வு செய்து, சீரமைப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறும் டிசம்பர் மாதம் முதல் இரண்டு வாரங்களில் கன மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மழை காரணமாக சுவாமி வீதியுலா வாகனங்களில் எந்தவித பழுதும் ஏற்படாதபடி சீரமைப்பு பணியை முழுமையாக முடிக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Tags : Swamy ,Annamalaiyar Temple ,
× RELATED உளுந்தாண்டார்கோயில் குளம் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க கோரிக்கை