×

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேர்முகத் தேர்வு நடத்தி ஓராண்டு கடந்தும் ஊராட்சி செயலாளர் நியமனம் இல்லை

திருவண்ணாமலை, அக்.24: திருவண்ணாமலை மாவட்டத்தில், நேர்முகத் தேர்வு நடத்தியும் நிரப்பப்படாமல் ஒரு ஆண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை. எனவே, கிராம ஊராட்சிகளில் அடிப்படை கட்டமைப்பு பணிகளை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்பு இல்லாத காரணத்தால், அதற்காக மத்திய அரசு வழங்கும் மானியமும் கிடைக்கவில்லை. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கவும், மக்களுக்கு தேவையான பணிகளை நிறைவேற்றவும் முடியாமல் திண்டாடும் நிலை உள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால், ஒட்டுமொத்த பணிகளையும் தனி அதிகாரிகள் மேற்கொள்வதால் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 கிராம ஊராட்சிகள் உள்ளன. மேலும், தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான கிராம ஊராட்சிகள் உள்ள மாவட்டமாகும். மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கிராம ஊராட்சிகளில் வசிக்கின்றனர். ஆனால், மொத்தமுள்ள 860 ஊராட்சிகளில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 70 ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதனால் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கடந்த ஆண்டு மே மாதம் நேர்முகத் தேர்வு நடந்தது. தகுதியுள்ள நபர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 16 மாதங்கள் கடந்த பிறகும் இதுவரை பணி நியமன ஆணை வழங்கவில்லை. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில், ஊராட்சி செயலாளர்கள் பணி நியமனத்துக்கான நேர்காணல் நடந்தபோது, வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் நடந்து முடிந்துவிட்டது.

ஆனால், இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் பணி நியமனம் செய்ய எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நேர்முகத் தேர்வு நடத்தியும், தகுதியுள்ள நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என இளைஞர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே, ஊராட்சி செயலாளர் இல்லாமல் பணிகள் முடங்கியுள்ள கிராம ஊராட்சிகளின் நலன் கருதி, தகுதியுள்ள நபர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : interviews ,district ,Thiruvannamalai ,panchayat secretary ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று