×

மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் விளக்கிட வேண்டும் பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பது எப்படி? பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு

நாகர்கோவில், அக்.24: தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை ஆசிரியர்கள் விரிவுரையாற்ற வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பள்ளி கல்வி இயக்குநரின் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இத்தகைய மகிழ்ச்சிகரமான நன்னாளில் சில இடங்களில் மக்கள் கவன குறைவாக பட்டாசு வெடிப்பதால் தீ விபத்து ஏற்பட்டு குடிசை பகுதிகளில் உயிர் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்படுகிறது. மேலும் சிறார்களுக்கு தீக்காயங்களும், சில நேரங்களில் பார்வை இழப்பும் ஏற்படுகிறது. இத்தகைய நிகழ்வுகளை தவிர்ப்பதும், தடுப்பதும் நமது முக்கிய கடமை ஆகும். மேலும் தீபாவளி நன்னாளில் சிறியவர்களும், பெரியவர்களும் பட்டாசு பயன்படுத்தும் வேளையில் முறையாக கவனமாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். கவனக்குறைவு காரணமாக தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விபத்துகள் அற்ற, மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி கொண்டாட பள்ளி மாணவ மாணவியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், மாவட்ட கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள்:
* பட்டாசுகளை கொளுத்தும் போது தளர்வான ஆடைகள் உடுத்துவதை தவிருங்கள். டெரிகாட்டன், டெரிலின் ஆகிய எளிதில் பற்றக்கூடிய ஆடைகளை அணிய கூடாது.
* பட்டாசு கொளுத்துமிடத்திற்கு அருகே ஒரு வாளி தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடலுக்கு அருகாமையிலோ வெடிக்க வேண்டாம். மாறாக பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடியுங்கள்.
* மூடிய பெட்டிகளில், பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்க செய்யாதீர்கள். ராக்கெட்டுகளை வெட்ட வெளியில் குடிசைகள் இல்லாத பகுதிகளில் மட்டுமே செலுத்துங்கள்.
* பட்டாசுகளை கூட்டமான பகுதிகளிலும், தெருக்களிலும் மற்றும் சாலைகளிலும் வெடிக்காதீர்கள். பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைக்கு முன்னரோ, அருகேயோ வெடிக்காதீர்கள்.
* குழந்தைகள் பட்டாசுகளை பெற்றோர் முன்னிலையில் அவர்களது பாதுகாப்பின் கீழ் வெடிக்க வேண்டும். மருத்துவமனை அருகே பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
* விலங்குகளை துன்புறுத்தும் வகையில், அவைகள் பயப்படும் வகையில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள். பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகே பட்டாசுகளை வெடிக்கவோ, கொளுத்தவோ செய்யாதீர்கள்.
* இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரை பட்டாசுகளை வெடிக்காதீர்கள். அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஏனெனில் அது உடலையும், மன நிலையையும் பாதிக்கும். காதுகள் செவிடாகக் கூடும். ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டாம்.
கடந்த ஆண்டில் மாணவ மாணவியர் மனதில் பாதுகாப்பான முறைகள் பற்றிய சிந்தனை செயல்பாடுகள் சிறக்கும் வகையில் மாணவ மாணவியருக்கு பள்ளிகளில் விழிப்புணர்வு செயல்முறை காட்சிகள் செய்தும், பொது இடங்களில் மாணவ மாணவியர் கலந்துகொண்டு பேரணிகள், ஊர்வலங்கள் ஆகியவை நடத்தியும் ஆசிரியர்ளுக்கு அடிப்படை தீ விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு பற்றிய வகுப்பு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர்களால் நடத்தப்பட்டும், கடந்த ஆண்டில் பெருந்தீவிபத்துகள் அதிகம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
எனவே தலைமை ஆசிரியர்கள் பள்ளியின் காலை இறைவணக்கத்திற்கு பிறகோ அல்லது, அணி திரளும்போதோ தோராயமாக 5 நிமிடங்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவுரையாற்ற வேண்டும். தீபாவளியின்போது மாணவ மாணவியர் பாதுகாப்பான வழிமுறைகளை அவர்களே செயல்படுத்த ஏதுவாக உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Headmasters ,Director of School Education ,
× RELATED ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 3 அரசு பள்ளி...