×

தீபாவளி முன் பணம், போனஸ் வழங்காததை கண்டித்து பஸ் டெப்போக்களில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் குமரியில் 12 இடங்களில் நடந்தது

நாகர்கோவில், அக்.24 : தீபாவளி பண்டிகைக்கான போனஸ் மற்றும் முன் பணம் வழங்காததை கண்டித்து, குமரி மாவட்டம் முழுவதும் போக்குவரத்து கழக பணிமனைகள் முன் தொழிற்சங்கத்தினர் நேற்று அதிகாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தீபாவளி பண்டிகையையாெட்டி போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும் 20 சதவீத போனஸ் மற்றும் முன் பணமாக ₹10,000 வழங்க தமிழக அரசு ஆணையிட்டது. ஆனால் போக்குவரத்து கழகத்தில் போதிய பணம் இல்லாததால் முன் பணம் கூட வழங்காமல் இருந்தனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் போனஸ் மற்றும் முன் பணம் வழங்கப்படாமல் இருப்பதை கண்டித்து, போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் சார்பில் 23ம்தேதி அதிகாலை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பும், நேற்று (23ம்தேதி) காலை 6 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.  கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பணிமனை முன், அரசு போக்குவரத்து கழக தொமுச செயலாளர் சிவன் பிள்ளை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனை எண் 1 முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொமுச போக்குவரத்து கழக பொருளாளர் கனகராஜ் தலைமை வகித்தார். இதே போல் செட்டிக்குளம், திங்கள்சந்தை, குழித்துறை, கன்னியாகுமரி, படந்தாலுமூடு, குளச்சல் உள்பட பணிமனைகள் முன் போராட்டம் நடந்தது. காலையில் பணிக்கு வந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

சிறிது நேர ஆர்ப்பாட்டத்துக்கு பின், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர். நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன் சி.ஐ.டி.யு. பணிமனை செயலாளர் ஜாண்ராஜன், தொமுச தலைவர் தங்கசெழியன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொமுச சிதம்பரம், சிஐடியு பகவதியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நாகர்கோவிலில் ராணித்தோட்டம், மீனாட்சிபுரம், செட்டிக்குளம், கன்னியாகுமரி, விவேகானந்தபுரம், திங்கள்சந்தை, குளச்சல், திருவட்டார், குழித்துறை உள்பட 12 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த நிலையில் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு நாளை (24ம்தேதி) போனஸ் வழங்கப்படும் என்றும்,  முன் பணத்தை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறி இருந்தார். அதன்படி நேற்று தொழிலாளர்களின் போராட்டத்தை தொடர்ந்து அனைவருக்கும் முன் பணமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. குமரி மாவட்டத்திலும் அனைவருக்கும் முன் பணம் கிடைத்தது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், குமரி மாவட்ட போக்குவரத்து கழகத்துக்கு முன் பணம் மற்றும் போனஸ் வழங்க 6 கோடி தேவைப்படுகிறது. இதற்கான பணத்தை ஆங்காங்கே வாங்கி வைத்துள்ளோம். முன் பணம் வழங்கப்பட்டு உள்ளது. போனசும் இன்று மாலைக்குள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Tags : demonstrations ,bus depots ,locations ,Kumari ,Diwali ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் ORS...