×

நாகர்கோவிலில் அமைச்சரை வரவேற்று அதிமுக டிஜிட்டல் பேனர்கள் அதிகாரிகள், போலீஸ் கண்டுகொள்ளவில்லை

நாகர்கோவில், அக்.24 : நாகர்கோவிலில் அதிமுகவினர் நேற்று அமைச்சர் சரோஜாவை வரவேற்று, டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை பள்ளிக்கரணையில் அதிமுகவினர் வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்து, சுப என்ற இளம்பெண் பைக்கில் இருந்து தவறி சாலையில் விழுந்தார். அந்த சமயத்தில் பின்னால் வந்த குடிநீர் லாரி ஏறி நசுக்கியதில், சுப  உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நீதிமன்ற தடை உத்தரவு இருந்தும், அந்த உத்தரவை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தாததால் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் நீதிமன்றமும் கடுமையான எச்சரிக்கை விடுத்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சியினர் பேனர் வைக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதற்கிடையே தமிழக அரசும், அனுமதியின்றி பேனர்கள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பேனர்கள் கலாச்சாரம் குறைந்து இருந்தது. சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட நிகழ்வில் கூட பேனர்கள் இல்லை. கட்சி நிகழ்ச்சிகளின் போது தொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளதாக, அதிமுக சார்பில் பிரமாண பத்திரமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நாகர்கோவிலில் நேற்று, தமிழக அரசின் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் சரோஜா கலந்து கொண்டார்.  நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியையொட்டி அதிமுகவினர் திடீரென பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். நிகழ்ச்சி நடந்த மண்டபத்தின் அருகிலும், மண்டப  சாலை சந்திப்பிலும் பிளக்ஸ் பேனர்கள் இருந்தன. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே, எஸ்.பி. நாத் ஆகியோரும் பங்கேற்றறனர். நீதிமன்றம் பல்வேறு கெடுபிடிகள் விதித்த பின்னரும் கூட அதிமுகவினர் வைத்திருந்த பிளக்ஸ் பேனர் பொதுமக்களை அதிருப்தி அடைய செய்தது. கலெக்டர், எஸ்.பி.வந்த பின்னரும் கூட யாரும் இது பற்றி கண்டு கொள்ள வில்லை. அதிமுகவினர் இப்போது வைத்ததால், அடுத்தடுத்து இனி மற்ற கட்சிக்காரர்களும் பேனர்கள் வைப்பார்கள். எனவே இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : minister ,Digital Digital Banners ,Nagercoil ,
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...