×

போலீசாரின் அபராதத்தை கண்டித்து பேரணிக்கு திரண்ட வாகன ஓட்டுனர்கள் ராஜபாளையத்தில் பரபரப்பு

ராஜபாளையம், அக். 23:  ராஜபாளையத்தில் போலீசார் அடாவடியாக அபராதம் விதிப்பதாக கூறி, வாகன ஓட்டுனர்கள் நேற்று பேரணி செல்ல முயன்றனர். அவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.ராஜபாளையத்தில் போலீசார் வாகன ஓட்டுனர்களுக்கு அடாவடியாக அபராதம் விதிப்பதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்தும் ராஜபாளையத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தங்களது வாகனங்களை ஒப்படைக்க ஜவஹர் மைதானத்திலிருந்து பேரணியாக செல்ல வாடகை வாகன உரிமையாளர்கள், ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் மற்றும் டூவீலர் ஓட்டுனர்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தனர். இதன்படி நேற்று காலையில் ராஜபாளையம் ஜவஹர் மைதானத்திலிருந்து, வட்டார போக்குவரத்து அலுவகத்திற்கு வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட 500 பேர் பேரணியாக செல்ல முயன்றனர்.

தகவலறிந்து அங்கு வந்த டிஸ்பி நாகசங்கர் பேரணியாக செல்ல முயன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பேரணி செல்ல முயன்றவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில பிரதிநிதி கண்ணன் கூறுகையில், ‘‘ராஜபாளையம் தாலுகா சொக்கநாதன்புத்தூர் பகுதியிலிருந்து, அழகாபுரி வரையிலான பகுதியில் மொத்தம் 12 போலீஸ் செக்போஸ்ட்கள் உள்ளன. இப்பகுதியில் வாகன சோதனை என்ற பெயரில் தொடர்ந்து அடுத்தடுத்த செக்போஸ்ட்களில் வாகன ஓட்டுனர்களுக்கு, போலீசார் அபராதம் விதிக்கின்றனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி நாகசங்கர் தெரிவித்துள்ளார்’ என்றார்.


Tags : Drivers ,Rajapalayam ,protest rally ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!