×

பருவ மழை துவக்கம் நிலங்களை பண்படுத்தி சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள் தேவாரத்திற்கு வந்த 18ம் கால்வாய் தண்ணீர்

தேவாரம், அக். 23:தேவாரம் பகுதிகளில் 18ம் கால்வாய் தண்ணீர் வந்ததால் விவசாய பரப்பு அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் உள்ளிட்ட ஊர்களை சுற்றிலும் உள்ள 44 கண்மாய்கள் பயன்பெறும் வகையில் 18ம் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மானாவாரி விவசாயம் செய்வதற்கு வசதி உண்டாகும். குறிப்பாக மானாவரி நிலக்கடலை, எள், கப்பை உள்ளிட்ட பயிர்களுடன், இந்த பகுதிகளில் உள்ள தென்னை, வாழை, காய்கறிகள் விவசாயமும் அதிகரித்திட வசதி உண்டாகும். எனவே 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து கூடலூர் வைரவன் கால்வாய் விலக்கில் இருந்து 18ம் கால்வாய் வழியே கடந்த 3 நாட்களுக்கு முன் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று முன்தினமே 40 கிலோ மீட்டரை கடந்து தேவாரம் வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை 18ம் கால்வாய் விவசாயிகள் சங்க தலைவர் ராமராஜ், துணை தலைவர் காளிமுத்து, நிர்வாகிகள் ஆசைதம்பி உள்ளிட்டவர்கள் மலர்தூவி வரவேற்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டாகி உள்ளன.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘18ம் கால்வாய் தண்ணீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், கிணறுகளில் நீரூற்று உண்டாகும். விவசாயம் அதிகரிக்க வாய்ப்புகள் ஏற்படும்’ என்றனர்.

Tags : monsoon season ,land ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!