×

‘சாரலால்’ சாலையோர வியாபாரிகள் பாதிப்பு

சிவகங்கை, அக். 23: சிவகங்கை மாவட்டத்தில் பகலில் பெய்யும் மழை மற்றும் தொடர் சாரல் மழையால் சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்தூர், தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் பகுதியில் பெரிய அளவிலான ஜவுளி, மளிகைக்கடைகள் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கிராமங்கள் அதிகம் என்பதால் அனைத்து கிராமங்களில் இருந்தும் அருகில் உள்ள பெரிய ஊர்களில் உள்ள கடைகளில் ஜவுளி எடுப்பது வழக்கம்.கிராமப்புற மக்கள் தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்னர்தான் ஜவுளி உள்ளிட்ட தீபாவளிக்கு தேவையான பொருட்கள் வாங்குவது வழக்கம். இதனால் தீபாவளி பண்டிகைக்கு முன்பு சில நாட்கள் அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். இதே நாட்களில்தான் சாலையோரங்களில் விற்கப்படும் குறைந்த விலையிலான ஆடைகள், துண்டுகள், வெடிகள், குடை, பிளாஸ்டிக் பொருட்கள், பெண்களுக்கான வளையல், தோடு உள்ளிட்ட பேன்சி பொருட்கள் என ஏராளமான கடைகள் சாலையோரங்களில் திறக்கப்படும். தீபாவளிக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் தற்போது சாலையோர கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இங்கும் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

தீபாவளி முதல் நாள் இரவு வரை இங்கு அதிகப்படியான வியாபாரம் இருக்கும். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரையும் லேசான மழையும், பகலில் அவ்வப்போது சாரல் மழையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்தது. இதனால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதியடைந்தனர். சாலையோரம் முழுவதும் மழைநீர், சேறும், சகதியும் இருந்ததாலும் பொருட்கள் நனைந்துவிடும் என்பதாலும் கடைகளை திறக்க முடியாமல் தவித்
தனர்.இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது, ‘பண்டிகை காலங்களில் சாலையோரங்களில் பொருட்கள் விற்பனை செய்வது வழக்கம். ஜவுளி வாங்க வருபவர்கள் பல்வேறு பொருட்களை வாங்குவர். கிராமத்தினர் குறைந்த விலையில் கிடைக்கும் சாலையோர பொருட்களை வாங்குவர். தீபாவளிக்கு முந்தைய சில நாட்கள் மட்டுமே நாங்கள் கடைகள் நடத்துவோம். இந்த நாட்களில் முழுமையாக வியாபாரம் செய்து விடுவோம். ஆனால் இந்த ஆண்டு சாரல் மழை பெய்வது எங்கள் வியாபாரத்தை பாதிக்க செய்கிறது’ என்றனர்

Tags : Sarallal ,roadside merchants ,
× RELATED பழநியில் கடைகளுக்கு இடம் ஒதுக்கித்...