×

மானாமதுரை அருகே பாசன கால்வாயில் பாலம் கட்ட 4 கிராம விவசாயிகள் எதிர்ப்பு

மானாமதுரை, அக். 23: மானாமதுரை அருகே வைகை ஆற்றில் இருந்து விவசாயத்திற்கு செல்லும் பாசன கால்வாயில் தனியாருக்கு பாலம் கட்ட அனுமதி வழங்கிய பொதுப்பணித்துறையினரை கண்டித்து 4 கிராம விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மானாமதுரை வைகை ஆற்றின் கரையோரம் தல்லாகுளம் பகுதியில் இருந்து பசலை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் மூலம் கீழப்பசலை, மேலப்பசலை, சங்கமங்கலம், ஆதனூர் உள்ளிட்ட நான்கு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த கால்வாயில் பாண்டியன் நகரில் ஏற்கனவே பாலம் ஒன்று கட்டப்பட்டதால் கால்வாயினை தூர்வாரும்போது சிரமம் ஏற்படுவதாக கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கேப்பர்பட்டினம் பகுதியில் மற்றொரு பாலம் கட்டுவதற்கு தனியார் ஒருவர் அனுமதி பெற்றுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து பாலம் பணிகள் நடக்க உள்ள இடத்தில் நான்கு கிராம விவசாயிகளும் திடீரென கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பாலம் கட்டும் பணிக்கு தடைவிதிக்கவேண்டும். ஆனந்தபுரம் பகுதியில் கால்வாயில் கலக்கும் கழிவுநீரை தடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அதிகாரிகளிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Tags : irrigation canal ,Manamadurai ,
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை