×

பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை அமல் இணையதள பிரச்சனையால் இன்னலுக்கு ஆளாகும் ஆசிரியர்கள்

தொண்டி, அக். 23: தமிழகம் முழுவதும் கல்வித்துறையில் புதிய வழியாக பயோ மெட்ரிக் முறையில் ஆசிரியர்கள் வருகையை கைரேகை மூலம் பதிவு செய்து அதை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. பல நேரங்களில் இணையதள பிரச்சனையால் வருகை பதிவு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் தொடக்க நிலை பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகையை அழைபேசியின் மூலம் அனுப்ப வேண்டும் என்பதாலும் சிரமம் ஏற்படுதாக புகார் தெரிவிக்கின்றனர்.  தமிழக கல்வி துறை தற்போது கல்வியில் புதிய வழிமுறைகளை பின்பற்றி வருகிறது. நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் வருகை நேரத்தை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் அதற்கு தேவையான உபகரணங்களையும் வழங்கியுள்ளது. இதேபோல் தொடக்கப் பள்ளிகளுக்கு செல்போனில் வருகை பதிவு என்னும் செயலி இறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்க்ள மற்றும் மாணவர்களின் வருகையை காலை 9 மணிக்கு அனுப்பி விடவேண்டும். சில நேரங்களில் நெட் கிடைக்காத சமயங்களில் அருகில் உள்ள மையத்திற்கு சென்று அனுப்பிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகையே 9 மணிக்கு மேல்தான் உள்ளது. அனைத்து வகுப்பு வருகையையும் சரி செய்து அனுப்புவதற்குள் நேரமாகி விடுவதாக தெரிகிறது.

தற்போது மழை காலம் என்பதால் பெரும்பாலான மாணவர்கள் காலதாமதமாகவே வருகின்றனர். இவர்களின் வருகையை எவ்வாறு தெரிவிப்பது என்ற குழப்ப நிலையும் ஏற்படுகிறது. இதனால் இதுபோன்ற செயல்களில் கவனம் செலுத்துவதைவிட மாணவர்கள் கல்வி திறனை அதிகரிக்க ஆசிரியர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது, பயோமெட்ரிக் முறை மற்றும் செல்போன் மூலம் வருகையை பதிவு செய்வது மிகவும் வரவேற்கதக்கது. ஆனால் நெட் பிரச்சனை குறிப்பிட்ட நேரம் உள்ளிட்ட சில பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். நெட் கிடைக்காத பட்சத்தில் அருகில் உள்ள மையத்திற்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு ஆசிரியர் பள்ளியில் எவ்வாறு இதை செயல்படுத்த முடியும். மாணவர்களை பார்த்துக்கொள்வதா, அதிகாரிகளுக்கு அனுப்புவதா என்று கூறினர்.

பெற்றோர்கள் கூறுகையில், அரசு பள்ளியில் மாணவர்களின் வருகை என்பது குறிப்பிட்ட நேரத்தில் இருக்காது. வேன் உள்ளிட்ட வசதி இல்லாததால் நடந்துதான் வரவேண்டும். அதனால் காலதாமதம் ஏற்படும். மேலும் 9 மணிக்கு மேல்தான் வருவார்கள் அவ்வாறு வரும் மாணவனின் வருகை தவறும். அரசு பள்ளியில் கல்வி திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை கொடுக்கும் விதமாக விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். கல்வித்திறனை மேம்படுத்த இந்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. மாறாக ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கில்தான் செயல்படுவதாக தெரிகிறது என்றனர்.

Tags : Teachers ,schools ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்