×

தொண்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் தீபாவளி வியாபாரம் மந்தம் வியாபாரிகள் புலம்பல்

தொண்டி, அக். 23: தொண்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் இன்னமும் தீபாவளி வியாபாரம் சூடு பிடிக்காமல் மந்தமாக இருப்பதால் பெரும் முதலீடு போட்டு காத்திருக்கும் ஜவுளி கடை உள்ளிட்ட வியாபாரிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
வழக்கமாக தீபாவளி பண்டிகை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே களை கட்டிவிடும். ஜவுளிகடை, மளிகை கடை என அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதும். ஆனால் இம்முறை நான்கு நாள்களே தீபாவளிக்கு உள்ள நிலையில் கடை வீதிகள் வெறிச்சோடி கிடக்கிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரம் காட்டுவதாலும் இருக்கும் பணத்தை விவசாயத்தில் போட்டு விட்டதாலும் தீபாவளிக்கு இன்னமும் தயார் ஆகவில்லை என தெரிகிறது. கடந்த மூன்று வருடங்களாக போதிய மழை இல்லாததால் விவசாயம் பொய்த்துபோய் விவசாயிகள் பெரும் கடனில் உள்ளனர். இந்த வருடம் பருவமழை சரியான நேரத்தில் பெய்துவிட்டதால் இன்சூரன்ஸ் பணம் உள்ளிட்ட தொகையை விவசாயத்தில் போட்டுவிட்டதால் தீபாவளிக்கு செலவு செய்ய வழியில்லாமல் திண்டாடி வருகின்றனர். இது குறித்த வியாபாரிகள் கூறியதாவது, தீபாவளி பண்டிகைக்கு அதிகளவில் வியாபாரம் செய்வோம். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வியாபாரம் களை கட்டிவிடும். ஆனால் இந்த வருடம் எந்த கடையிலும் கூட்டம் இல்லை. இருப்பினும் ஒரு சில நாட்களுக்கு முன்பு கூட வியாபாரம் நடக்கலாம் என்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை