×

திருமண உதவி கேட்டவர்களில் 1,500 பேரின் விண்ணப்பங்கள் தள்ளுபடியா?

மதுரை, அக்.23: ஏழை பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் ஆயிரத்து 500 பேரின் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தெரிந்தவர்களே தேர்வு செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மூவலூர் ராமாமிர்த அம்மையார் ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம் கடந்த திமுக ஆட்சியில் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, திருமணத்தின்போது பிளஸ்2 முடித்திருந்தால் அந்த ஏழைப்பெண்ணுக்கு ரூ.25ஆயிரம் ரொக்கம், 4 கிராம் தங்கமும், பட்டம் பெற்றிருந்தால் ரூ.50ஆயிரம் ரொக்கம், 4 கிராம் தங்கமும் திருமண உதவியாக தரப்படுகிறது. திமுக ஆட்சிக்காலத்தில் திருமணத்திற்கும் முன்னதாகவே இந்த நிதி வழங்கப்பட்டு வந்தது, ஏழைப்பெண்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.

ஆனால், அதிமுக ஆட்சிப்பொறுப்பேற்றது முதல், இத்திட்டத்தின் மீதான கவனக் குறைபாட்டினால், திருமணமாகி 2 குழந்தை பிறந்த பிறகே, குறைந்தது 4வருடம் கழித்துத்தான் பணமும், தாலிக்கு தங்கமும் கிடைக்கும் நிலை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையில், இந்த திருமண உதவி கேட்டு மதுரை மாவட்டத்தில் மட்டும் ஓராண்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து, இந்த விண்ணப்பங்களின் பேரில் விசாரணை நடத்தி ஒப்படைக்கப்பட்ட நிலையில், இதில் திட்டத்தின் பலன் முழுமையாக அனைவருக்கும் கிடைக்காத வகையில், திடீரென ஆயிரத்து500 விண்ணப்பங்களை தள்ளுபடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘கடந்த 2016-17 வரையிலும் திருமண உதவி கேட்டு விண்ணப்பி–்த்திருந்தவர்கள் பட்டியலுடன், சமூக நலத்துறையினர், சமுதாய அமைப்பாளர்கள் வீடு வீடாக விசாரணை நடத்தினார்கள். இதற்கான ஆவணங்களை எல்லாம் சரிபார்த்து, சுமார் 5ஆயிரம் விண்ணப்பங்களை உதவி வழங்கலாம் என்ற நிலையில் சமூக நலத்துறை அலுவலகத்திலும் ஒப்படைத்திருக்கின்றனர். ஆனால், இதில் ஆயிரத்து500 விண்ணப்பங்கள் வரையிலும் போதிய வருமான, இருப்பிடச் சான்றுகள் ஆன்லைனி–்ல் சரியாக ஏற்றப்படவில்லை உள்ளிட்ட தவறான காரணங்களைக் கூறி தள்ளுபடி செய்வதாக தகவல்கள் வருகின்றன.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், தீபாவளிக்கும் முன்னதாக விண்ணப்பித்தவர்களுக்கு உரிய திருமண உதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆளும்கட்சியினர் தெரிவித்துள்ள நிலையில், விண்ணப்பித்தவர்களில் ஆயிரத்து 500பேரை நீக்கி விட்டு, தங்களுக்கு தேவையானவர்களின் பெயர்களைச் சேர்த்து, இந்த உதவி கிடைக்க வழி செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே விண்ணப்பித்த, தகுதியுடைய அனைவருக்கும் திருமண உதவி கிடைக்க வழி செய்ய வேண்டும். மேலும், 2017-18ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு இதுவரை சரிபார்ப்பு கள ஆய்வு நடத்தப்படவில்லை. இதற்கும் விசாரணை நடத்தி, இந்த விண்ணப்பதாரர்களான ஏழைப் பெண்களுக்கும் அரசின் உதவி கிடைப்பதற்கான நடவடிக்கையை வேகப்படுத்த வேண்டும்’’ என்றனர்.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...