×

தேர்வு செய்வதில் பாரப்பட்சம் காட்டுவதாக புகார் தே.கல்லுப்பட்டியில் பழமை பேசும் தேவன்குறிச்சி மலை

 மதுரை, அக்.23: ‘அறிவோம் வரலாறு, காப்போம் தொன்மையை’ நோக்கில் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா தே.கல்லுப்பட்டிக்கு வரலாற்று மரபு நடை குழு சென்று வந்தது. வரலாற்று மரபு நடையின் தலைவர் பரணிதரன், ஆசிரியர் ரெங்கசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தே.கல்லுப்பட்டியில் தேவன்குறிச்சி மலை பகுதியை வலம் வந்தனர். ஆர்வலர்கள், மாணவர்களுக்கு மதுரையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான முனீஸ்வரன் விளக்கமளித்தார்.அவர் கூறியதாவது: 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்த பகுதியாக தேவன்குறிச்சி மலை காணப்படுகிறது. இங்கு 1976-77ல் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் முதுமக்கள் தாழி, கருப்பு சிவப்பு நிறம் கொண்ட மண் பானை ஓடுகள், பழுப்பு நிற கற்கருவிகள், மணிகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. அதனுடைய எச்சங்கள் இன்றளவும் பாதுகாப்பின்றி காணப்படுகின்றன.

தேவன்குறிச்சி மலையில் சமண துறவிகள் வாழ்ந்துள்ளனர். மகாவீரர் நின்ற நிலையிலும், கிணற்றினுள் அமர்ந்த நிலையிலும் காணப்படுகிறார். சமண புடவுகள், படுக்கைகள் காணப்படுகின்றன. 13ம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சி காலத்தில், இங்கு சிவாலயம் கட்டப்பட்ட சான்றினை கோயில் கல்வெட்டில் காண முடிகிறது. முந்தைய கோயில் பெயர், திருவாற்றேசவரமுடைய நாயனார் கோயில் என்றும், ஊரின் பழமைப் பெயர் செங்குன்ற நாட்டு பெருங்குன்றத்தூர் என்றும் கோயில் கோட்டைச் சுவற்றின் கல்வெட்டில் அறிய முடிகிறது.கோயில் கருவறை பாண்டியர் ஆட்சி காலத்திலும், அர்த்தமண்டபம் மகாமண்டபம் நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோயிலைச் சுற்றி 8 துண்டு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன இக்கல்வெட்டுகளில் கோயிலுக்கு பூஜை செய்ய, தீபங்கள் ஏற்ற நிலங்கள் தானம் வழங்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில் நுழைவு வாயிலில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் காணப்படுகின்றது.

புலிகளிடமிருந்து மக்களை காத்து உயிர் நீத்த வீரனுக்கு எழுதப்பட்டதாகும். பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்திட்டை ஒன்றும் காணப்படுகிறது. மலை உச்சியில் நாயக்கர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட பள்ளி கொண்டருளிய பெருமாள் கோயிலும் இருக்கிறது. இங்கு ஜைனம், சைவம், வைணவம் மூன்றும் ஒரே இடத்தில் காட்சி அளிப்பது சிறப்பம்சமாகும். தொன்மையான இடங்களை பாதுகாப்பதுடன், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஒவ்வொருவரின் கடமையாகும் இவ்வாறு அவர் கூறினார்.

Tags : hill ,Devancurichi ,
× RELATED சேதமான சாலையில் ஆம்புலன்ஸ் வர...