×

ராசிபுரத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத வாரச்சந்தை

 ராசிபுரம்,அக்.23: ராசிபுரத்தில் கட்டிடம், மேற்கூரை, மற்றும் அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லாமல் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இதனால் மழைக்காலத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காலி நிலத்தில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை சந்தை கூடுகிறது. காலை 7 மணிக்கு துவங்கும் சந்தை, இரவு 7 மணி வரை நடக்கும். இச்சந்தை மிகவும் பழமை வாய்ந்த சந்தையாகும். இந்த சந்தைக்கு மங்களபுரம், ஆயில்பட்டி, மெட்டாலா, நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, பட்டணம், சீராப்பள்ளி, புதுச்சத்திரம், சிங்களாந்தபுரம், காக்காவேரி, அத்தனூர், ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு, ஆண்டகளுர்கேட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், தாங்கள் உற்ப்பத்தி செய்த காய்கறிகள், கீரை மற்றும் பருப்பு வகைகள், சிறு தானியங்களை கொண்டு வந்து கடைவைத்து விற்பனை செய்து வருகின்றனர். ராசிபுரம் நகர் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த பொதுமக்கள் வாரத்துக்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை, இந்த சந்தையில் வாங்கி பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடை வைத்து வியாபாரம் செய்கின்றனர்.

இந்த சந்தையில் கடைகளுக்கு என கட்டிடங்கள் கிடையாது. மேடை, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி என எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இடையாது. நாளுக்கு நாள் வியாபாரிகள் வருகை அதிகரித்தால் சந்தைக்கு வெளியே பஸ் ஸ்டாண்டில் சேலம், நாமக்கல், சேந்தமங்கலம்  பஸ்கள் நிறுத்தப்படும் இடங்கள் வரையிலும், வியாபாரிகள் ஆக்கிரத்து கடைவைத்து காய்கறி விற்பனை செய்து வருகின்றனர். மழை மற்றும் வெயில் காலத்தில் சந்தை வளாகம் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. மக்கள் மழைக்கு ஒதுங்க கூட இடம் இருப்பது இல்லை. சந்தையை விரிவாக்கம் செய்து வளாகத்தில் மேற்கூரை அமைத்து, கடைகள் வைக்க மின்சாரம், மின்விளக்குடன் மேடை அமைக்க வேண்டும். மேலும், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பிடம், குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சந்தை நாளில் ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில் பஸ்களை நிறுத்தக்கூட இடமின்றி நெரிசல் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Rasipuram ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து