×

தீபாவளி பண்டிகையையொட்டி கும்பகோணத்தில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

கும்பகோணம், அக். 23: தீபாவளி பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கும்பகோணம் பகுதியில் 3 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சை மாவட்டம் கும்பகோணம்  உச்சிப்பிள்ளயார் கோவில், பெரிய தெரு, நாகேஸ்வரன் வடக்கு வீதி, ஆயிகுளம் ஆகிய பகுதியில் உள்ள துணிக்கடை, நகைக்கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும் கும்பகோணம் பகுதியில் வாகன எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதி, பழைய மீன் மார்க்கெட், ஆயிகுளம் சாலையில் ஆகிய இடங்களில் போக்குவரத்து பாதித்தது. இதனால் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் உள்ளிட்ட அனைத்து பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கூட்ட நேரத்தில் திருட்டு சம்வங்கள்  போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து பொதுமக்களுக்கு தேவையான அறிவுப்புகளை போலீசார் செய்து வருகின்றனர்.

மேலும் பொதுமக்களின் நலன்கருதி தஞ்சை மார்க்கத்தில் இருந்து வரும் நகர், புறநகர் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் அனைத்தும் கும்பேஸ்வரர் கோயில் மேலவீதி, திருமஞ்சன வீதி, காமாட்சி ஜோசியர் தெரு, கச்சேரி சாலை, நால்ரோடு வழியாக கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை மார்க்கமாக செல்லும் புறநகர் பேருந்துகள் காமராஜர் ரோடு, ரயில் நிலையம் சாலை, திருநாராயணபுரம் ரோடு,  நால்ரோடு, செட்டிமண்டபம் பைபாஸ், அசூர் பைபாஸ், கருப்பூர் பைபாஸ், தாராசுரம், அம்மாப்பேட்டை வழியாக செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. இதேபோல் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நகர் மற்றும் மினி பேருந்துகள் அனைத்தும் காமராஜர் ரோடு, மகாமக குளம் அண்ணா சிலை, காந்தியடிகள் சாலை, ராமசாமி கோயில், ஏஆர்ஆர் ரோடு, கும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதி வழியாக வரும் 24, 25, 26ம் தேிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போக்குவரத்து ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

Tags : Kumbakonam ,Diwali ,
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...