×

திருவண்ணாமலை கலெக்டரை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, அக்.23: திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர், மாவட்டம் முழுவதும் உள்ள பிடிஓ அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ருத்ரய்யன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் பேசுகையில், தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள சூழ்நிலையில், மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். அரசின் திட்டங்களை செயல்படுத்தும் போது, பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்தபோதிலும் உயர் அதிகாரிகள் திட்ட பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர்.
எந்தத் துறையும் செய்யாத திட்டங்களை, ஊரக வளர்ச்சித் துறைக்கு கொடுத்து மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரின் ஆடியோ பதிவு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடு வழங்கும் திட்டத்தை பல்வேறு இன்னல்களுக்கு இடையில் செயல்படுத்தி வருகிறோம். எனவே, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் ஊரக வளர்ச்சித்துறை தொடர்ந்து போராடும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாநில துணை தலைவர் ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர் வேலுமணி, ராம ஜெயம், புகழேந்தி, வட்டகிளை தலைவர் பாலகிருஷ்ணன், சிபிசக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல், நல்லம்பள்ளி, தர்மபுரி, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட அனைத்து பிடிஓ அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : protest ,Rural Development Officers Association ,Collector ,Thiruvannamalai ,
× RELATED திமுகவினர் ஆர்ப்பாட்டம்