×

விபத்துகளை தவிர்க்க மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் மின்சாரத்துறை அதிகாரி அறிவுரை

ஜெயங்கொண்டம், அக். 23:
மின் விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தவிர்க்க மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அதை தொடாமல் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு மின்வாரிய செயற்பொறியாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.வடகிழக்கு பருவமழையொட்டி அரியலூர் மாவட்டத்தில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதேபோல் மின்வாரியமும் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. மின்பாதையின் மின்கம்பி அறுந்து கிடந்தால் பொதுமக்கள் அதை தொடாமலும் அருகில் செல்லாமலும் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தாலோ, மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் மின்கம்பிகள் தொய்வாக இருப்பதை கண்டறிந்தாலோ பொதுமக்கள் அதை தொடாமல் அருகில் உள்ள மின்துறை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.பொதுமக்கள் தங்களது சொந்த இடங்களில் பணிகள் மேற்கொள்ளும்போது அருகில் மின்பாதை கம்பிகள் சென்று கொண்டிருந்தால் அதன் அருகில் செல்லாமலும், மின்பாதையை தொடாமலும் கவனமாக பணியை மேற்கொள்ள வேண்டும்.இடி அல்லது மின்னலின்போது வெட்ட வெளியில் இருக்க வேண்டாம். அப்போது மின்கம்பிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி, வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுங்கள். பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான ஆடு, மாடு முதலிய விலங்கினங்களை மின்கம்பத்திலோ அல்லது இழுவை கம்பியிலோ கட்டுவதை தவிர்க்க வேண்டும்.

வீடுகளில் மின் இணைப்புக்கான சர்வீஸ் மெயின் அருகில் இஎல்சிபி பொருத்தினால் மின் கசிவால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கலாம். வீடுகளில் மின் ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் செய்ய வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரை பொறிக்கப்பட்ட மின்சார சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மின் பிளக்குகளை பொருத்துவதற்கு முன்பும், எடுப்பதற்கு முன்பும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும். பேஸ் கம்பியில் தான் ஸ்விட்ச் கண்ட்ரோல் வைக்க வேண்டும்.
குளியலறையிலும், கழிவறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்த கூடாது. ப்ரிட்ஜ், கிரைண்டர், மிக்சி, மோட்டார், இஸ்திரி பெட்டி போன்றவற்றுக்கு நீல இணைப்புடன் கூடிய மூன்று ஜாக்கெட் உள்ள மின் பிளக்குகளை பயன்படுத்த வேண்டும். பிளக் பாயிண்ட்களில் வெறும் மின்சார வயர்களை பிளக்கு உபயோகிக்காமல் பயன்படுத்தக்கூடாது. உடைந்த சுவிட்சுகள், பிளக்குகள், பழுதுபட்ட ஒயர்கள் மற்றும் பழுதான மின் சாதனங்கள் உங்கள் பயன்பாட்டில் இருப்பின் அவற்றை தாமதமின்றி புதுப்பித்து கொள்ள வேண்டும்.மோட்டார், அயர்ன்பாக்ஸ், வாளியில் சொருகும் வாட்டர் ஹீட்டர் ஆகியவை இயக்கத்தில் இருக்கும்போது கையால் தொடக்கூடாது. சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும். குழந்தைகளை சுவிட்ச் போடச்சொல்லி விளையாட்டு காட்டக்கூடாது. அவர்கள் அப்படி விளையாடுவதையும் அனுமதிக்கக்கூடாது. சுவரின் உள்பகுதியில் மின்சாரத்தை எடுத்து செல்லும் ஒயர்களுடன் உடன் கூடிய பிவிசி பைப்புகள் பதிக்கப்பட்டிருந்தால் அப்பகுதிகளில் ஆணி அடிக்கக்கூடாது.டிவி ஆண்டனாக்களை மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகே கட்டக்கூடாது. டிவி ஆண்டனாவின் ஸ்டே ஒயரை மின் கம்பத்தில் கட்டக்கூடாது. மின் இணைப்புக்கு எக்ஸ்டென்சன் கார்டுகள் உபயோகிக்கும்போது அவைகளில் பழுதுகள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் மின்கம்பி அறுந்து விழுதல், மின்மாற்றி பழுது போன்ற அவசரகால புகார்களை அந்தந்த பகுதி உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அலுவலக தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு மின்வாரிய செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Tags : accidents ,Electricity Office ,
× RELATED மின்கம்பி அறுந்து விழுந்து 6 மாடுகள் பலி