×

திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் கட்ட எதிர்ப்பு

திருப்பூர், அக். 23:  திருப்பூரில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்து விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். பொன்னுச்சாமி: திருப்பூர் கோட்டத்திற்குட்பட்ட திருப்பூர் தெற்கு, வடக்கு, பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி வட்டங்கள் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை தேவைப்படுகிறது. கடந்த 10 ஆண்டாக உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை வழங்கப்படவில்லை. ஒவ்வொரு தாலுகாவிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பெயரை கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். உழவர் பாதுகாப்பு திட்டம் அட்டை இருந்தால் மட்டுமே அரசின் நலத்திட்ட உதவிகளான இயற்கை மரணம், கல்வி உதவித்தொகை, ஓய்வு ஊதியம், திருமண உதவித்தொகை, திடீர் விபத்து போன்றவற்றுக்கு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பலன்பெற முடியும். எனவே, கோட்டாட்சியர் அனைத்து விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் நலம்பெற திருப்பூர் கோட்டத்தில் உழவர் பாதுகாப்பு அட்டை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பூர் தெற்கு வட்டம், பல்லடம் பிரதான ரோட்டில் உழவர் சந்தை அருகே மாட்டு சந்தை செயல்பட்டு வருகிறது. மாட்டுச்சந்தை மிக குறைந்த பரப்பளவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாட்டுச் சந்தை நடக்கிறது. ஆயிரக்கணக்கான கால்நடைகள் சந்தைக்கு விற்பனைக்கு வருவதால், இட நெருக்கடி ஏற்படுகிறது. திருப்பூரின் மையப்பகுதியில் மாட்டுச் சந்தை கூடுகிறது. இதனால், மாநகரப்பகுதியில் போக்குவரத்திற்கும் உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். திருப்பூர் தெற்கு வட்டத்திற்குட்பட்ட நீர் ஆதாரமாக விளங்குகின்ற ஆண்டிபாளையம் குளத்தில் திருப்பூர் மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட நடவடிக்ைக எடுக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் வருவாய்த்துறை மூலமாக எடுக்கப்படவில்லை. மேலும், நீர்நிலை சம்பந்தப்பட்ட இடங்களில் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் எடுக்க வேண்டும் என பலமுறை நீதிமன்றம் அறிவுறுத்தியும் அதை கண்டுகொள்ளாமல் மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்து வருகிறது. இது சம்பந்தமாக வருவாய் துறைக்கு மனுக்கள் பல முறை கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இது விவசாயிகள், பொதுமக்களுக்கு மிகவும் ஏமாற்றமாக உள்ளது.

பழனிச்சாமி: முதலிபாளையம் பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம். எங்களது பகுதியில் குட்டையோ, வாய்க்காலோ, ஓடையோ கிடையாது. கிணற்றுநீர்தான் எங்களுக்கு நீராதாரம். நாங்கள் நிலத்தடி நீரை நம்பித்தான் விவசாயம் செய்து வருகிறோம். போதிய மழை இல்லாததால், எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்துவிட்டது. இந்நிலையில் தனி நபர் ஒருவர் 12 ஆண்டுகளாக விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டிய நீரை, சட்டத்துக்கு புறம்பாக வெளியாட்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து வருகிறார். இது தொடர்பாக அலுவலர்களிடம் பலமுறை எடுத்துரைத்தும் யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தண்ணீர் திருட்டு சமீபகாலமாக அதிகரித்துள்ளது. மேலும் எங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை. எங்களின் வாழ்வதாரத்தை காப்பாற்றும் வகையில் பல ஆண்டு காலமாக நடந்துவரும் தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும். பெருமாநல்லூர் ஊராட்சி பகுதியில் சேகரிப்படும் குப்பை, அப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கொட்டப்படுவதால் பாலித்தீன் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயர்வது தடுக்கப்படுகிறது. நீர்நிலைகளில் பாலித்தீன் அதிகம் சேர்வதால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. ஆகவே நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார்: திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் ஈரோடு, சேலம் செல்லும் தனியார் மற்றும் அரசு பஸ் நடத்துனர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுத்தங்களான ச.பெரியபாளையம், ஊத்துக்குளி ஆர்.எஸ். ஊத்துக்குளி செல்லாது என்றும், நிற்காது என்றும் சொல்வதால் பயணிகள் மிகவும் பாதிக்கின்றனர். சில நேரங்களில் ஊத்துக்குளி பயணிகளை நடத்துனர்கள் அடாவடியாக நடத்துவதால் சச்சரவுகள் ஏற்படுகிறது. திருப்பூர்-ஈரோடு, சேலம் பஸ்கள் ஊத்துக்குளி ஆர்எஸ் (ரயில் நிலையம்) வழியாக இயக்கி வந்த நிலைமாறி கொடியம்பாளையம் நால்ரோடு வழியாக சென்று விடுவதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. ஊத்துக்குளி தாலுகா அரசு மருத்துமனை ஊத்துக்குளி அய்யம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 400-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும், உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது புதிய கட்டிடத்தில் போர்வெல் (உப்பு) குடிநீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.  ஆற்றுக்குடிநீர் இணைப்பு பழைய கட்டிடம் வரை மட்டுமே உள்ளது.

சுமார் 200 மீட்டர் குழாய் நீட்டிப்பு செய்து, நீரேற்று தொட்டி கட்டினால் மட்டுமே புதிய கட்டிடத்திற்கு ஆற்றுக்குடிநீர் ஏற்றி வழங்க முடியும். அதேபோல் புதிய கட்டிடத்தில் இரண்டு கழிப்பறை மட்டுமே உள்ளது. மேலும், போதுமான மருத்துவர், செவிலியர் இல்லாத்தால் நோயாளிகள் சிரமப்படும் நிலையுள்ளது. மேலும் சில விவசாயிகள் கூறியதாவது: திருப்பூர், பல்லடம், அவிநாசி மற்றும் ஊத்துக்குளி பகுதி விவசாயிகளுக்கு மாதந்தோறும் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும். காலை 11 மணி என்பதால், விவசாயிகள் பலரும் காலை 10.30 மணிக்கே வந்து விடுகின்றனர். ஆனால், 12.30 வரை கூட்டம் ஆரம்பிக்கப்படவில்லை என கூறினர்.

Tags : sewage treatment plant ,pond ,Tiruppur Antipayalam ,
× RELATED படர்தாமரை உடலுக்கு நாசம்; ஆகாயத்தாமரை...