×

கீழ்பவானி பாசன பகுதிகளில் 2ம் கட்ட நெல் நடவு பணி தீவிரம்

காங்கயம், அக். 23: கீழ்பவானி பாசன பகுதிகளில் இரண்டாம் கட்ட நடவுப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பவானிசாகர் அணை மூலம் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 18 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற்று வருகிறது. இந்த ஆண்டு 2ம் பாசனத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் நெல் நடவுக்கான உழவுப் பணிகளை துவங்கினர். ஆனால் இந்த ஆண்டு சரியான நேரத்தில் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டாலும், பாசனப்பகுதிகளான திட்டுப்பாறை, நத்தக்காடையூர், முத்தூர், மங்களப்பட்டி ஆகிய பகுதிகளில் அடிமடை மற்றும் கசிவு நீர் உள்ள பகுதியில் மட்டும் நெல் நடவு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் 2500 ஏக்கர் வரை பணிகள் முடிந்தது.

மற்ற இடத்தில் மழை சரியாக பெய்யாத காரணத்தால் நெல் நடவுப்பணியில் சுணக்கம் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், இரண்டாம் கட்டமாக நடவுப்பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர். இதில் நத்தக்காடையூர், முத்தூர், மங்களப்பட்டி பகுதியில் பாசனம் பெரும் பகுதி மற்றும் கசிவு நீரால் ஓடையில் வரும் தண்ணீரை கொண்டு நடவுப்பணிகள் முடிக்கும் தருவாயில் உள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கூட்டுறவு சங்கங்களில் உர இருப்பு குறைவாக இருப்பதால் தனியார் கடையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.  ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு நடவு கூலியாக ரூ.6 ஆயிரத்து 500, டிராக்டர் மூலம் உழவு செய்ய ரூ.8 ஆயிரம், கரை கட்டி சேறு பூச ரூ.4 ஆயிரம் செலவாகிறது. மேலும் பூச்சி மருந்து, அறுவடை செலவு என நெல் வீட்டுக்கு வரும்போது ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவாகிறது. இதனால் விவசாயிகள் பலர் நெல் நடவு பணிகளை மேற்கொள்ளாமல் உள்ளனர். இந்த ஆண்டு 5 ஆயிரம் ஏக்கர் வரைதான் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விவசாயி கூறினார்.

Tags :
× RELATED சென்னையில் கொரோனா தடுப்பு...