×

வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் சாக்கடையில் தேங்கி கிடக்கும் கழிவு நீரால் கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பு

கரூர், அக். 23: கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கடேஸ்வரா நகர்ப்பகுதிகளில் சாக்கடை செல்லாமல் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது.கரூர் வெங்கடேஸ்வரா நகர்ப்பகுதியில் இருந்து எம்ஜிஆர் நகர், ராயனூர் செல்லும் வழியில் உள்ள பிரதான சாக்கடை வடிகால் புதிதாக கட்டும் பணி கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது.இதன் காரணமாக இந்த பிரதான சாக்கடை வடிகாலில் வந்து கலக்கும் வகையில் உள்ள வெங்கடேஸ்வரா நகரில் உள்ள 4 தெரு சாக்கடை வடிகால்களும் கழிவு நீர் செல்லாமல் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.சாக்கடை தேக்கம் மற்றும் தற்போது பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக, ஆழமாக இல்லாத இந்த சாக்கடை வடிகாலில் டெங்கு போன்ற பல்வேறு காய்ச்சல்களை வரவழைக்கும் கொசுக்கள் லட்சக்கணக்கில் உருவாகி உள்ளது.அதிக கொசுக்களின் உற்பத்தி காரணமாக இந்த பகுதியினர் மிகுந்த சிரமத்துக்கும், பல்வேறு தொற்று நோய்களுக்கும் ஆளாகி வருகின்றனர். சாக்கடை தேக்கம் காரணமாகத்தான் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி மக்களை அதிகம் சிரமப்படுத்தி வருவதாகவும் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே பிரதான சாக்கடை வடிகால் பணியை விரைந்து முடித்து தேங்கியுள்ள சாக்கடை கழிவுகளை பிரதான சாக்கடை வடிகாலில் சேர்க்கும் வகையில் விரைந்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.நகராட்சியை பொறுத்தவரை காய்ச்சல் போன்ற எந்தவிதமான பிரச்னை உருவெடுத்தாலும், வெங்கடேஸ்வரா நகர், குறிஞ்சி நகர், சவுரிமுடித்தெரு போன்ற பகுதிகள்தான் முதலிடத்தில் உள்ளன. இந்நிலையில் இந்த பகுதிகளை சுற்றிலும் உள்ள சாக்கடை வடிகால்களில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளதால், பாதுகாப்பு கருதி தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : area ,Venkateswara Nagar ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...