×

சத்தி நக்சல் பிரிவுக்கு தனி போலீஸ் ஸ்டேஷன்

ஈரோடு, அக். 23:  சத்தியமங்கலம் நக்சல் பிரிவுக்கு தனி போலீஸ் ஸ்டேஷன் அமைப்பது தொடர்பாக மாவட்ட காவல்துறை சார்பில் அரசுக்கு பரிந்துரை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது 36 சட்டம் ஒழுங்கு ஸ்டேஷன், நான்கு அனைத்து மகளிர் ஸ்டேஷன், ஒரு குற்றப்பிரிவு ஸ்டேஷன் என 41 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளது. புதிதாக திண்டலில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் உருவாக்க அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. அரசு ஒப்புதல் வழங்கி புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டி முடிக்கப்பட்டதும், வெள்ளோடு, பெருந்துறை, ஈரோடு தாலுகா ஆகிய ஸ்டேஷன்களின் எல்லைகளை மாற்றி அமைத்து திண்டல் புதிய ஸ்டேஷனுடன் இணைக்க மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது.

இதேபோல பெருந்துறையில் புதிதாக அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில், சத்தியமங்கலத்தில் செயல்பட்டு வரும் நக்சல் தடுப்பு பிரிவுக்கு தனியாக ஒரு போலீஸ் ஸ்டேஷன் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய மாவட்ட காவல்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு அரசு மருத்துவமனை ஸ்டேஷன் ரூ.81 லட்சம் செலவில் கட்ட அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதையடுத்து விரைவில் கட்டுமான பணிகள் துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Police Station ,Sati Naxal Division ,
× RELATED காவல் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது