×

திருட்டு சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீசார் நியமனம்

ஊட்டி, அக். 23: தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்பட  உள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் வசிக்க கூடிய பொதுமக்கள் பொருட்கள்,  பட்டாசுகள், புத்தாடைகள் வாங்குவதில் மும்முரம் காட்டி வருகின்றனர். ஊட்டி,  குன்னூர், கூடலூர் போன்ற பகுதிகளில் உள்ள துணிக்கடைகள், இனிப்பு கடைகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், தீபாவளி கூட்ட  நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், செயின் பறிப்பு, வாடிக்கையாளர்கள் போன்று கடைகளில் ஆடைகள் மற்றும் பொருட்களை  திருடி செல்லுதல் போன்ற சம்பவங்களை தடுக்கவும், அவற்றில் ஈடுபடுபவர்களை  பிடிக்கவும் மாவட்ட காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்க்கொண்டுள்ளது.
இதற்காக ஊட்டி, கூடலூர், குன்னூர் போன்ற பகுதிகளில்  கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் 150  போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல்துறை  அதிகாரிகள் கூறுகையில், தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடுபவர்களை  பிடிக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் 150 போலீசார் கண்காணிப்பு பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர அனைத்து உட்கோட்டங்களிலும் சீருடை அணியாத  காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மக்கள் கூடும் கடை  வீதி, மத்திய பஸ் நிலையம், மார்க்கெட் போன்ற பகுதிகளில் ரோந்து பணிகளை  மேற்கொண்டு வருகின்றனர். ஊட்டியில் கமர்சியல் சாலை, மார்க்கெட் ஆகிய  பகுதிகளிலும், கூடலூர் பஜார் பகுதியிலும், குன்னூர் மார்க்கெட் மற்றும் பஸ்  நிலையம் பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சீருடை அணியாத பெண் போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள மார்க்கெட், கடை  வீதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு  பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : police officers ,theft ,incidents ,
× RELATED தெலங்கானாவில் சந்திரசேகர ராவ்...