×

அரசு பள்ளி மைதானத்தை கோயிலுக்கு வழங்க எதிர்ப்பு

ஈரோடு, அக். 23:  அரசு பள்ளிக்கு சொந்தமான மைதானத்தை கோயிலுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர். பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளிக்கு சொந்தமான நிலத்தில் 15 சென்ட் இடத்தை அங்குள்ள செல்லாண்டியம்மன் கோயில் பயன்பாட்டிற்காக மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தின் பெருந்துறை தாலுகா கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமையில் கலெக்டர் கதிரவனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரசு பள்ளிக்கு சொந்தமான நிலத்தை கோயிலுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பது கண்டிக்கத்தகது.

பள்ளிக்கு சொந்தமான நிலத்தை மாற்றியமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் கூட நடத்தப்படவில்லை. அனைத்து பணிகளும் ரகசியமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. பள்ளிகல்வித்துறை ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை. கடந்த 2012ம் ஆண்டு இதேபோல விளையாட்டு மைதானத்தை வருவாய்துறை சார்பில் கோயிலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோது மாணவர்கள் போராட்டம் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விளையாட்டு மைதானத்தை கோயிலுக்கு வழங்க முன் வந்திருப்பது தவறான முன் உதாரணம் ஆகிவிடும். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED சம்பளம் கொடுக்க வழியில்லை விற்பனைக்கு வரும் கோயில் விளக்குகள்