×

ஏரிகளுக்கு தண்ணீர் வரும் பாதைகளை சீரமைக்க கோரிக்கை

அந்தியூர், அக்.23: அந்தியூர் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் வரும் பாதைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கெட்டி சமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, சந்தி பாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரி உள்ளிட்டவை உள்ளன. இந்த ஏரிகளில் சேமிக்கப்படும் தண்ணீர், ஏரி பாசனத்திற்கும், கால்வாய் பாசனத்திற்கும் பயன்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் சரியான மழை இல்லாததால் ஏரிகள் வறண்டு கிடந்தன. தற்போது, பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிக்க துவங்கி உள்ளது. மேலும், வனப்பகுதியில் உள்ள வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி 250 கன அடி உபரிநீர் மேற்குக் கரை மற்றும் கிழக்குக் கரைப் பகுதிகள் வழியாக வெளியேறி வருகிறது.

அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரானது இந்த ஏரிகளுக்கு வந்தடையும். ஆனால் ஏரிகளுக்கு தண்ணீர் வரும் வழி பாதையானது பெரிய பள்ளங்களாகவும், செடி,கொடி மற்றும் மரங்கள் வளர்ந்து சீரமைக்கப்படாமலும் உள்ளதால், தண்ணீர் தேங்கி வீணாகும் நிலை உள்ளது.வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து முதலில் ஏரி பாசனங்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால், வரும் வழிப்பாதைகள் பராமரிப்பின்றி கிடப்பதால் முறையாக ஏரிகளுக்கு தண்ணீர் வந்து சேர முடியாத நிலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஏரியில் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு கிடந்ததால் அந்தியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்தது.

தற்போது, வடகிழக்கு பருவ மழையால் தண்ணீர் தேவையான அளவு கிடைக்கும் என்ற நிலையில், வரும் வழிப்பாதைகள் தூர்வாரப்படாமல் கிடப்பதால் தண்ணீரை ஏரிகளில் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. பொதுப்பணித் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிகளை தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் மூலம் தூர்வாரப்பட்டால் அதிகளவு தண்ணீரை தேக்கிவைக்க முடியும்.ஆகவே, அந்தியூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் வரும் வழி பாதைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : waterways ,lakes ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 71.91 சதவீதம் நீர் இருப்பு..!!