×

குடிநீர் வழங்காததால் ஆத்திரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் மறியல்

விருத்தாசலம், அக். 23:
விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட 33வது வார்டு சித்தலூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் , அப்பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக சாலையின் இரு புறங்களிலும்  பள்ளம் தோண்டப்பட்டபோது நகராட்சி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

பின்பு நகராட்சி நிர்வாகத்தினர் அப்பகுதி மக்களுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்து வந்தனர் .  இந்நிலையில் கடந்த 4 நாட்களாக சரியான முறையில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்காமல் இருந்து வந்துள்ளது. இதனால் குடிநீருக்கு மிகவும் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் விருத்தாசலம்- ஜெயங்கொண்டம் சாலையில் அமர்ந்து நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு, குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இச்சாலை மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர்.


Tags :
× RELATED நாங்குநேரியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்